Wednesday 19 March 2014

சிறப்பு கட்டுரை: தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட்!



சினிமாவை பொறுத்தவரையில் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு டிரென்ட் உருவாகிக் கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் காமெடி ஒரு டிரென்ட் ஆக இருந்தது!


 இதற்கு உதாரணமாக சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற பல காமெடி படங்களை சொல்லலாம்! சென்ற ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ் சினிமா புதிய ஒரு டிரென்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பழங்கால கலைகளான தெருக் கூத்து, நாடகக் கலை, கரகாட்டம் போன்ற கலைகள் தான் இப்போது உருவாகி வரும் சில படங்களின் மைய கரு!


இந்த வரிசையில் முதலில் வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தை குறிப்பிடலாம்! ’வெயில்’, ‘அங்காடித் தெரு’ போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களை தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய படம் ’அரவான்’. பழங்காலத்து தமிழர்களின் வாழ்க்கை முறையை சொன்ன இப்படம் வசந்த பாலனுக்கு கை கொடுக்காத நிலையில்,


இப்போது நாடகக் கலையை கையில் எடுத்து ‘காவியத்தலைவன்’ என்ற பெயரில் இயக்கி வருகிறார். நடிப்புக்கு பிருத்திவிராஜ், சித்தார்த், வேதிகா, இசைக்கு ஏ.ஆர்.ரஹமான் என பெரும் கூட்டணி அமைத்து இயக்கி வரும் இப்படம் கோலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.


‘காவியத்தலைவன்’ நாடக கலையை கொண்ட படம் என்றால், ‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா இயக்கும் படம் கரகாட்ட கலையை மையமாகக் கொண்டது என்கிறார்கள்! ஏற்கெனவே கரகாட்டத்தை மைமமாக வைத்து, ராமராஜன் - கனகா நடிப்பில் கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படம் 1989-ல் வெளிவந்து


தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது பாலாவும் கரகாட்டத்தை மையப்படுத்தி படம் எடுக்கிறார்.


அடுத்து தெருக்கூத்தை மையமாக வைத்து, ‘கள்ளப்படம்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜெ.வடிவேல் இயக்கி வர, கே. இசை அமைக்கிறார். ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ‘இறைவன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.


இந்த வரிசையில் சத்தமில்லாமல் ‘தரணி’ என்ற பெயரில் மற்றுமொரு படம் உருவாகி வருகிறது. குகன் சம்பந்தம் என்பவர் இயக்கும் இப்படம் தெருக் கூத்து கலையை மையமாக வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது.


இப்படி மேற்குறிப்பிட்ட படங்கள் எல்லாம் பழங்காலத்து கலைகளை மையப்படுத்தி எடுத்து வர, சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் போஸ்டரையும், டீஸரையும் பார்க்கும்போது இதுவும் பழங்காலத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்படுகிற படமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


இதற்கு காரணம், ‘உத்தம வில்லன்’ விளம்பரங்களில் காணப்படும் கமலின் வித்தியாசமான் மேக்-அப்புடைய தோற்றம் தமிழகத்தின் கூத்து மற்றும் கேரளாவின் பிரசத்தி பெற்ற ’தெய்யம்’ கலையை நினைவுப்படுத்துவது மாதிரி இருக்கிறது என்பதுதான்!


ஆனால் கமல் நடிக்கும் படம் என்பதால் ‘உத்தம வில்லன்’ மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களிலிருந்து மாறுபட்ட வகையில் தான் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

0 comments:

Post a Comment