Monday 24 March 2014

கண்டிஷன்களைப் போட்டு கதறடிக்கும் கதாநாயகன்!



அட்டகத்தி படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் அறிமுகமான தினேஷின் இரண்டாவது படமாக குக்கூ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் ஆகிய இரண்டு படங்கள் தயாரிப்புநிலையில் உள்ளன.


அட்டகத்தி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் இளம் ஹீரோக்களுக்கான பந்தயத்தில் தினேஷ் மிகவும் பின்தங்கியே இருப்பதால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லையோ? என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மை என்ன தெரியுமா?


அட்டகத்தி படத்துக்குப் பிறகு தினேஷைத் தேடி வந்த பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாம். பெரிய சம்பளம், கை நிறைய அட்வான்ஸ் என்றெல்லாம் ஆசைக்காட்டியும் தினேஷ் அசைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள் அவரைத் தேடிப்போய் திரும்பி வந்த உதவி இயக்குநர்கள்.


கதை எனக்குப் பிடிக்க வேண்டும். அப்புறம் முழுக்கதையையும் சீன் பை சீன் சொல்ல வேண்டும். படத்தின் ஸ்கிரிப்ட்டை பைண்ட் செய்து புத்தகமாகக் என்னிடம் கொடுக்க வேண்டும்.


 அதைப் படித்துப்பார்த்து எனக்கு திருப்தியாக இருந்தால்தான் கால்ஷீட் தருவேன் - என்று சொல்லிச் சொல்லியே தேடி வந்த பல இயக்குநர்களை தலைதெறிக்க ஓட வைத்துவிட்டாராம் தினேஷ்.


இப்படி கண்டிஷன் மேல் கண்டிஷனை போட்டதால் தான் தினேஷின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் அவரது நலம்விரும்பிகள்.


சில வருடங்களுக்கு முன், சித்திரம் பேசுதடி என்ற படம் வெற்றியடைந்தபோது, அப்படத்தின் நாயகனான நரேன், தன்னை மினி கமல்ஹாசனாக நினைத்துக் கொண்டு இப்படித்தான் ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டு கதை சொல்ல வந்த இயக்குநர்களை கதற அடித்தார். பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை தினேஷ் உணர்ந்தால் சரிதான்!

1 comments: