Friday 21 March 2014

ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. சந்தானத்தின் கலகல பேட்டி



என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ. இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா. ‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா.

 தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல இருந்த எனக்குப் புரிஞ்சது!”-ஆர்ம்ஸ் ஏற்றி, பாலீஷ் கூட்டி பளபளக்கிறார் சந்தானம்.

100 படங்களில் காமெடியன் என்ற மைல்கல்லுக்குப் பிறகு, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார்.

”ஆர்யா, அப்படிச் சொன்னார். மத்தவங்கள்லாம் என்ன சொன்னாங்க?”

”சிம்பு, ‘என்ன ஹீரோ… என்ன பண்றீங்க?’னு விசாரிச்சார். ‘அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க’ன்னேன். ‘ஏன்… என்னாச்சு?’னு கேட்டார். ‘நான் ஹீரோவா நடிக்கிறதுக்குள்ள வி.டி.வி.கணேஷ் எல்லாம் ஹீரோ ஆகிட்டார். ‘ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. அதனால நீங்க ‘சந்தானம்னே கூப்பிடுங்க’ன்னேன்.


 சிம்பு லைனை கட் பண்ணதும் பக்கத்துல இருந்த கணேஷ், ‘ஏண்டா அவரு உனக்கு போன் பண்ணார்னா, ஊர் உலகத்தைப் பத்தி ஏதாச்சும் பேசுங்க. என்னை ஏண்டா ஊறுகாய் ஆக்குறீங்க?’னு காண்டானார். ‘ஹீரோவா நடிக்கிற. முடி எல்லாம் கரெக்டா இருக்கா. மார்க்கெட்ல ஏகப்பட்ட புது விக் வந்திருக்கு. சாம்பிள் பார்த்தியா?’னு மெசேஜ் பண்ணார் ஜீவா. ‘நானும் யூத்தான்யா…’னு ரிப்ளை பண்ணேன். இப்படி… பல போட்டி பொறாமைகளுக்கு மத்தியில்தான் ஹீரோவா நடிக்க வேண்டியிருக்கு!”

”காமெடிப் பயணம் தெளிவாப் போயிட்டு இருக்கிறப்ப, ஏன் இந்தத் திடீர் திருப்பம்?”

”பழைய பல்லவிதான். ஆனா, இது, இந்தக் கதைக்காக எடுத்த முடிவு. இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவா நடிக்க முடியும். ஏன்னா, அப்பாவியாவும் இருக்கணும்; அப்ளாஸும் அள்ளணும். அப்போ ஒரு எஸ்டாபிளிஷ்டு ஹீரோவால இதைப் பண்ண முடியாது. புதுமுகமும் தாங்க மாட்டார். ஆக, எனக்கான சப்ஜெக்ட்டாத் தோணுச்சு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

மத்த படங்களைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா காமெடி, பளிச் பன்ச் மட்டும் சேர்த்துட்டு நான் ஹீரோ ஆகலை. ‘நான் எது பண்ணாலும் தியேட்டர்ல கைதட்டுவாங்க’னும் நினைக்கலை. ஸ்க்ரிப்ட்ல ஆரம்பிச்சு என் ஸ்கின்டோன் வரைக்கும் சிறிசும் பெருசுமா நிறைய சுவாரஸ்யம் சேர்த்திருக்கோம். படத்துல டான்ஸ், சேஸிங், ரன்னிங்னு நிறைய இருக்கு.


திடீர்னு ஒருநாள் கொஞ்ச தூரம் ஓடிட்டு, ‘கால் பிடிக்குது, தொடை பிடிக்குது’னு உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து நடிச்சா, ரெண்டு வருஷமாகும் படத்தை முடிக்க! அதுவும் போக, ‘வயித்தைப் பாரு தலகாணி மாதிரி வெச்சிருக்கான்’னு நாமளே பலரை ஓட்டியிருக்கோம். இப்போ நாமளும் அப்படி வந்து நின்னா, எல்லாரும் சிரிப்பாங்கள்ல. அதனால ஜிம் ஓட்டம், டான்ஸ் ஆட்டம்னு எல்லா ஏரியாலயும் பட்டி, டிங்கரிங் பார்த்துட்டுத்தான் நடிக்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சாமாவது ‘ஹீரோ லுக்’ வருதுல்ல!”

”வருது… வருது… ஆனா, அது மட்டும் போதுமா?”

”எவ்வளவோ யோசிக்கிறோம்… அதை யோசிக்க மாட்டோமா? ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’-வில் பவர்ஸ்டார் மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு சர்ப்ரைஸ் மேஜிக் வெச்சிருக்கோம். ஆனா, அதைப் பத்தி அப்புறம் பேசலாம்!”

”இப்பவே சொல்லுங்க…!” என்று அழுத்திக் கேட்டதும்…

” ‘லட்டுக்கு ஒரு பவர்ஸ்டார்’னா ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ல ஒரு சோலார்ஸ்டார். ஆமா ப்ரோ… நம்ம ராஜகுமாரன் சார், படத்துல பிரமாதமான ஒரு கேரக்டர் பண்றார். ‘காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப. கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியா?’னு என்கிட்ட கேட்பார். ‘பார்த்ததில்லை’ம்பேன். ‘இதுல நீ பார்ப்ப’னு சொல்வார். இது ஒரு டீஸர்தான். இப்படி படம் முழுக்க அவரோட அழும்பு தூள் பறக்கும்!

படத்தோட இயக்குநர் ஸ்ரீநாத், என் நண்பன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ல நடிக்கும்போதே, ‘நீ, நான், பிரேம்ஜி மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் மச்சான். நான்தான் டைரக்ஷன்’னு சொல்லிட்டு இருப்பான். அவனுக்கு டைரக்ஷன்தான் ஆர்வம். ஆனா, நடிக்கும் வாய்ப்புதான் வந்துச்சு. இப்போ அவன் திறமையை நிரூபிக்கிற மாதிரி இந்தப் படம் அமைஞ்சிருக்கு!”

”உங்க ஆதர்சம் கவுண்டமணியும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரே!”

”எனக்கு தங்கவேலு, கவுண்டமணி… இவங்க ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன்னு பல தடவை சொல்லியிருக்கேன். கவுண்டமணி அண்ணன்கிட்ட எப்பப் பேசினாலும், செம லந்து கொடுப்பார். ஏதோ ஒரு படம் வந்து செம மொக்கை வாங்கின சமயத்துல பேசினேன். ‘அண்ணே அந்தப் படம் பயங்கரமாப் போயிட்டு இருக்கு. டிக்கெட்டே கிடைக்கலையாம்’னு சொன்னேன். பட்டுனு, ‘ஏன் டிக்கெட்டே அடிக்கலையா?’னு கேட்டார் பாருங்க


ஒரு கேள்வி… அதுதான் கவுண்டர்!


சுந்தர்.சி, ராஜேஷ், பூபதி பாண்டியன், சுராஜ்னு காமெடியில பின்ற எல்லா டைரக்டர்ஸும், ‘அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க. சூப்பரா இருக்கும்’னு சொல்லுவாங்க. அந்த ஐடியா எனக்கும் உண்டு. ஆனா, அவர்கிட்ட இதைப் பத்தி நான் இதுவரை பேசினதே இல்லை. இப்போ இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்… இப்ப அவரும் ஹீரோவாப் பண்ணிட்டு இருக்கார். நானும் பண்றேன். அதனால எங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்துச்சுனா, அண்ணன்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்

வரலெட்சுமியை சினிமாவை விட்டு ஓட வைத்தது பாலா தானா?



பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை.


இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே.


வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம்.


மேலும் படத்திற்காக சசிகுமார் தனது கெட்டப்பை மாற்ற, தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.


இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்

அமலாபாலை கூட்டிக்கொண்டு காட்டுக்குப் போகும் டைரக்டர் : எதுக்குன்னு மட்டும் கேட்காதீங்க…



‘நிமிர்ந்து நில்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி. பல மாதங்களாக தயாரிப்பில் கிடந்த படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டதில் கொஞ்சம் மன வேதனையுடன் தான் இருந்தாராம் சமுத்திரக்கனி. ”என் எதிரிக்குக் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது” என்று தான் அந்த நேரத்தில் யோசித்தாராம் சமுத்திரக்கனி.

இதனால் அடுத்த படத்தை ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கும் அவர் அந்தப்படம் முழுவதையும் காட்டுக்குள் தான் எடுக்கப் போகிறார்.

“இந்தியாவில் 42 சதவீதம் காடுகள் தான் இருக்கு. அங்க வாழ்ற மக்கள் ரொம்ம ரொம்ப அதிகம். ஆனா நாம அவங்களைப் பத்தி எப்போதுமே கவலைப்பட்டது இல்லை. அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்லை. அவங்களோட ரியல் ஃலைப்பை பத்தித்தான் படமா எடுக்கப்போறேன் என்றார்.

ஊர்ப்பக்கம் போனா கிருஷ்ணா என்ற பெயரை சுருக்கு கிட்னா கிட்னா என்று கூப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைத்தான் இந்தப்படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இந்தப் படத்தில் அமலாபாலை ஹீரோயினாக்கி இருக்கும் அவர் பிறந்தது முதல் 45 வயது பாட்டி வரையான ஒவ்வொரு காலகட்ட கெட்டப்பையும் படத்தில் காட்டப்போகிறார். படத்தின் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். ஆனால் அமலாபால் அவருக்கு மகளாக நடிக்கிறார்.

க்ரேட் எஸ்கேப்.

ஈட்டியாக பாயும் அதர்வா!



ஸ்ரீதிவ்யா என்று சொல்வதைவிட ஊதா கலரு ரிப்பன்... என்று சொன்னால் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார் அந்த நடிகை. சிவகார்த்திகேயனோடு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா இப்போது பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.


அடுத்து இந்த ஊதா கலரு ரிப்பன் அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஈட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார்.


இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ரவி அரசு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார். மைக்கேல் ராயப்பனுடன் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார்.


ஈட்டி படத்தின் நான்கு பாடல் முடிவந்துவிட்டது. இவ்வருடத்தின் சிறந்த பாடல்கள் வரிசையில் ஈட்டி படத்தின் பாடல்கள் இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் கூறுகிறார். ஈட்டி படத்தின் படபிடிப்பு தஞ்சாவூரில் நடந்து வருகிறது. ‘பரதேசி’யில் பிரமாதமாக நடித்து அதிரவைத்த அதர்வா, இப்படத்தில் ஈட்டியாக பாய்வார் என எதிர்பார்க்கலாம்.

மான் கராத்தே இசை விமர்சனம்



எதிர்நீச்சல்’ ஆல்பத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதோடு, ஸ்ருதிஹாசன், தேவா, ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன் என பாடகர்களிலும் வெரைட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மற்ற ரசிகர்களைவிட ‘மான் கராத்தே’ ஆல்பம் எப்படி வருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ‘தல தளபதி’ ரசிகர்களுக்குதான் ஆர்வம் அதிகம். பின்னே... அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறாரே அனிருத். இவ்வளவு பில்டப்களுக்கும் ஈடுகொடுத்திருக்கிறதா ‘மான் கராத்தே’வின் பாடல்கள்!

மாஞ்சா...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

வழக்கமாக தன் இசையமைப்பில் வெளிவரும் ஆல்பங்களில் குறைந்தது இரண்டு பாடல்களையாவது பாடிவிடுவார் அனிருத். ‘மான் கராத்தே’ ஆல்பத்தில் முதல் பாடலையே தன் குரலில் ஆரம்பித்து பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இந்த வெஸ்டர்ன் டைப் பாடலின் பின்னணியில் கர்நாடக இசையை லேசாக ஒலிக்கவிட்டு பாடலை வித்தியாசமாக அமைத்திருக்கிறார் அனிருத். குறிப்பாக கர்னாடிக் கோரஸும், தவிலின் இசையையும் ரசனையாக கலக்க வைத்திருக்கிறார் அனிருத். கார்க்கியின் ஸ்டைல் வரிகளும், அனிருத்தின் குரலும் இந்தப் பாடலுக்கு பெரும் பலம். டிரம்ஸ், கிடார், பியானோ, தவில் என எல்லாவிதமான வாத்தியங்களையும் கலந்து கட்டி ரசிக்க வைத்திருக்கிறார். டிரைலரில் வரும் இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயனின் டான்ஸ் மூவ்மெண்ட் வாய்பிளக்க வைக்கிறது.

டார்லிங் டம்பக்கு....
பாடியவர்கள் : பென்னி தயாள், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : யுகபாரதி

ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் பின்னணியில் ஏற்கெனவே ஹிட்டடித்துவிட்ட ட்யூன் என்பதால் பரிச்சயத்துடன் இந்தப் பாடலுக்குள் நம்மால் உள்புக முடிகிறது. எனர்ஜி கொப்பளிக்கும் இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் பென்னி தயாளும், சுனிதி சௌகானும். ‘டார்லிங் டம்பக்கு... கிருடா... கிருடா....’ என பென்னி தொடங்கி வைக்க, ‘பாவிப்பயலே இவ உயிர்மூச்சுல கடைபோடுற...’ என சுனிதி ஆரம்பிக்கும் ஸ்டைலே சூப்பராக இருக்கிறது. கிடாரின் ஜாலங்கள் நிறைந்திருக்கும் இந்த போக் பாடலை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆடப்போவது நிச்சயம். சிவகார்த்திகேயன், ஹன்சிகாவின் ‘லுங்கி டான்ஸ்’ இப்பாடலுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமையும். யுகபாரதியின் பாடல் வரிகள் ரசிக்கும்படி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக நீண்ட நாட்கள் டிவிகளில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது இந்த ‘டார்லிங் டம்பக்கு’!

உன் விழிகளில்...
பாடியவர்கள் : அனிருத், ஸ்ருதிஹாசன்
பாடலாசிரியர் :ஆர்.டி.ராஜா

ஆல்பத்தின் இந்த ஒரே மெலடிப் பாடலைப் பாடியிருப்பவர்கள் அனிருத்தும், ஸ்ருதிஹாசனும். வெஸ்டர்ன் ‘பேஸ்’ சப்தங்களும், கர்நாடிக் வயலினும் கலவையாக கலந்து ஒலிக்கிறது இப்பாடலில். சரணத்தை அனிருத் பாட, பல்லவியில் அவரோடு கைகோர்த்திருக்கிறார் ஸ்ருதி. புதிதாக எதுவும் இந்தப் பாடலில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும், கேட்பதற்கு போரடிக்காத ரகம்தான். ஆச்சரியமாக இப்பாடலின் மூலம் ‘கவிஞர்’ அவதாரம் எடுத்திருப்பவர் ‘மான் கராத்தே’வின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ‘ஹேப்பி பர்த்டே’ ட்யூனோடு இப்பாடல் முடிவதால், அதற்கான காட்சி படத்தில் இடம்பிடித்திருக்கலாம்.

ராயபுரம் பீட்டரு...
பாடியவர்கள் : ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன்
பாடலாசிரியர் : ஆர்.டி.ராஜா

ரசிகர்களுக்கு வித்தியாச விருந்து கொடுக்கும் முனைப்போடு இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயனையும், நாட்டுப்புற பாடல் ஸ்பெஷல் ‘பரவை’ முனியம்மாவையும் இணைந்து பாடவைத்திருக்கிறார்கள்! தியேட்டரை அதிர வைக்கும் முடிவோடு இறங்கி குத்தியிருக்கிறார் அனிருத். எலக்ட்ரிக் கிடாரும், உறுமியும் இணைந்து விளையாடியிருக்கிறது ‘ராயபுரம் பீட்டரு...’ பாடலில்! ரகளையான இந்தப் பாடலுக்கு கைகொடுத்திருக்கிறது ஆர்.டி.ராஜாவின் வித்தியாசமான பாடல் வரிகள்! மொத்தத்தில் இந்தப் பாடல் ‘கொலக் குத்து’!

ஓப்பன் த டாஸ்மாக்...
பாடியவர்கள் : தேவா, அனிருத்
பாடலாசிரியர் : கானா பாலா

கானா பாலாவின் வரிகளுக்கு ‘கானா’ தேவாவின் குரல் என செம ரகளை பண்ணியிருக்கிறார்கள் இந்தப் பாடலில். ‘சரி சரி... க ம ப த நி....’ என தேவாவின் வாய்ஸில் கர்நாடக சங்கீதத்தோடு கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல் முழுவதும் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் அனிருத். பார்ட்டிகளிலும், ‘பப்’களிலும் நிச்சயமாக இடம் பிடிக்கும் இந்த ‘ஓப்பன் த டாஸ்மாக்’. முழுப்பாடலையும் தேவா பாட, இடையிடையே சின்ன சின்ன வித்தியாசமான வரிகளுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் அனிருத். பாடலின் கடைசியில் ‘பில்டிங் ஸ்டராங்கு பேஸ்மென்ட் வீக்கு...’, ‘ஐயாம் வெரி ஹேப்பி...’ என வடிவேலு, கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி டயலாக்கையே பாடல் வரியாக்கி எனர்ஜி ஏத்துகிறார் கானா பாலா. இன்னும் கொஞ்ச நாட்கள் பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலிக்கப்போவது நிச்சயம்!

மொத்தத்தில்... ‘3’, ‘எதிர்நீச்சல்’ ‘வணக்கம் சென்னை’ ஆல்பங்களைப் போன்ற பாடல்கள் நிச்சயம் இந்த ‘மான் கராத்தே’வில் இல்லைதான். ஆனால், இந்த வருடத்தின் ‘சூப்பர் ஹிட்’ வரிசையில் இந்த ஆல்பத்திற்கும் நிச்சயம் இடமிருக்கும். அமைதியாக உட்கார்ந்து ரசிப்பதற்குப் பதிலாக ரகளையாக எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறார் அனிருத்! காட்சிகளோடு பார்க்கும்போது பாடல்கள் கூடுதல் கவனம் பெறும்! ‘மான் கராத்தே’... அனிருத்தின் ஸ்பெஷல் குத்து!

பரத்தின் ஐந்தாம் தலைமுறை! ஒரு சிறப்பு பார்வை...!



பரத் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ’ஐந்து ஐந்து ஐந்து’.


 இந்தப் படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’கில்லாடி’.


 அத்துடன் ‘கூதரா’ என்ற மலையாள படத்திலும் நடித்து வரும் பரத்,


தமிழில் அடுத்து ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை’


என்ற படத்தில் நடிக்கிறார்.


இந்தப் படத்தை ‘ராஜம் புரொடக்‌ஷன்ஸ்’


 மற்றும்


‘கவிதாலயா’


 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க,


ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பழனியில் துவங்கவிருக்கிறது.


இந்தப் படத்தில் பரத்துடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் ‘படவா’ கோபியும் நடிக்கிறார்.

விஜய்க்கு ஈடு கொடுப்பாரா அனிருத்?



துப்பாக்கி’,

 ‘தலைவா’,

‘ஜில்லா’


ஆகிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாடிய விஜய்,


அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்திற்காகவும் ஒரு பாடலை பாட இருக்கிறார்!


‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜெயாராஜ், ’தலைவா’வில் ஜி.வி.பிரகாஷ்குமார்,


‘ஜில்லா’வில் இமான் ஆகியோர் இசையில் பாடிய விஜய் இப்படத்தில் அனிருத் இசையில் பாட இருக்கிறார்.


விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் அனிருத் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே விஜய் பாடிய மூன்று படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதை விட பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்


 ’ஹிட் மெஷின்’ அனிருத்!

அமரன் - திரைவிமர்சனம்...!



மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ அமரன், நண்பர்களின் அவமானத்திற்கு பிறகு மதுரையில் உள்ள தனது அத்தையின் காய்கறிக்கடையில் வேலை செய்கிறார். அங்கு காய்கறி வாங்க வந்த போலிஸாருடன் சண்டை போடுவதோடு, போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார்.

இதனால் பயந்து போன அமரனின் அத்தை, அமரனை சென்னைக்கு அனுப்பிவிடுகிறார்.சென்னைக்கு செல்லும் ரயிலில் நாயகி சோனுவை சந்திக்கும் அமரன், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ திடீரென மயக்கமாகி விழுந்துவிடுகிறார். சோனுவை அமரன் காப்பாற்றுகிறார். நினைவு திரும்பிய சோனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சோனுவும், அவரது காதலனும் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்ய இந்த ரயிலில் ஏறியதாகவும், யாரோ மயக்க பிஸ்கட் கொடுத்து தன்னை மயக்கிவிட்டு, காதலனை கடத்திக்கொண்டு சென்றுவிட்டாதாகவும் கூறுகிறார். சோனுவின் காதலனுடன் சேர்த்து வைக்க அமரன் முயற்சிக்கும்போது தான் காதலனை சோனுவின் தந்தையே கொன்று விட்டார் என்றும், சோனுவையும், அமரனையும் கொலை செய்ய தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் போலீஸ் அதிகாரி சம்பத்தும் அமரனை பழிவாங்க துடிக்கிறார். வில்லன்களிடம் இருந்து அமரன் – சோனு தப்பித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

கதை வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் படு சொதப்பல் அதைவிட கேரக்டரகளை புரிந்து கொள்ளாமலே நடிக்கும் நடிகர்களை வைத்து இயக்குனர் ஜீவன் எப்படித்தான் படத்தை இயக்கினாரோ தெரியவில்லை.இந்த படத்தை ஒரு நல்ல நடிகர், நடிகையை வைத்து எடுத்திருந்தால் கண்டிப்பாக ஹிட்படம் இது.

படத்தை பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்தால் ஏதாவது டிவியில் போடுவார்கள். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லாத படம்.

புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தரும் டி.இமான்!



விஜய் டி.வி.யின் ‘ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்த திவாகருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வழங்கிய டி.இமான்,


அதற்கடுத்து கேரளாவை சேர்ந்த கண்பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை ஒரு படத்தில் பாட வைத்தார்!


இப்படி நிறைய புதியவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி வரும் டி.இமான், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சரத் சந்தோஷ் என்ற இளைஞருக்கும் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.


இமான் இசை அமைக்கும் ’பஞ்சுமிட்டாய்’ படத்தில் வரும் டூயட் பாடல் ஒன்றில் சின்மயி கூட பாடுகிறார் சந்தோஷ்!


இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாபா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கடுப்பேத்தும் பார்ட் - 2 படங்கள்...! மாறுவார்களா இவர்கள்...!



சமீபகாலமாக வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் படமெடுப்பது தொடர்ந்து வருகிறது. சிங்கம்-2, பீட்சா-2 வில் ஆரம்பித்தது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என பல படங்களின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா-சந்தானம் ஆகியோர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம்.


இந்த படத்திலும் ஆர்யா-நயன்தாரா ஜோடி சேருவதோடு, இன்னொரு நாயகியாக தமன்னாவும் நடிக்கிறாராம். வழக்கம்போல் சந்தானம் இருக்கிறாராம்.

அதேபோல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம்.


இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா இல்லையாம்.


மாறாக, ஆண்ட்ரியா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். சூரி, முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்திலும் கலக்குகிறாராம்.

இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன், ரஜினி நடித்த எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம்கூட வளர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சந்தானத்தை ஓட,ஓட விரட்டிய சூரி...!



வடிவேலு வீழ்ச்சியினால் தனது காமெடிகளைக் கொண்டே முன்னணி காமெடியன் ஆனவர் சந்தானம்.


அதோடு சேட்டை படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்டார். ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் தோல்வியையே சந்தித்தன.


குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா, இது கதிர்வேலன் காதல் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களே ஊத்திக்கொண்டதால், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு சந்தானத்தின் மீதான மோகம் குறைந்து விட்டது.


 மாறாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் என சூரி நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருப்பதால், அவர் பக்கம் ஹீரோக்கள் மட்டுமின்றி டைரக்டர்களும் திரும்பியுள்ளனர்.

இதற்கெல்லாம் மேலாக சந்தானத்தின் படக்கூலி ஹீரோக்களையே மிஞ்சும் வகையில் எகிறி நிற்பதும் ஒரு முக்கிய காரணமாகியிருக்கிறது.


 இதனால், அஞ்சான் படத்துக்கு சந்தானத்தை புக் பண்ணயிருந்தவர்கள் கடைசி நேரத்தில் சூரியை புக் பண்ணி விட்டனர். இதனால் சந்தானத்தின் வாய்ப்பை கைப்பற்றி அவரை பின்தள்ளியிருக்கிறார் சூரி. 

இன்றைய சினிமா; குக்கூ - திரைவிமர்சனம்!!!...சபாஷ்...!




தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

இயக்கம் : ராஜு முருகன்

நடிப்பு : தினேஷ், மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ்

ஒளிப்பதிவு : பி.கே.வர்மா

இசை : சந்தோஷ் நாராயணன்

எடிட்டிங் : ஷண்முகம் வேலுச்சாமி

பஸ்களிலும், ரயில்களிலும் நாம் பயணிக்கும்போது எத்தனையோ பார்வையற்றோரைக் கடந்து வந்திருப்போம். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள்! ஆனால், அவர்களுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அவர்களுக்கும் பார்வை இருக்கிறது, ரசனை இருக்கிறது, அன்பு இருக்கிறது, கோபம் இருக்கிறது, காதல் இருக்கிறது என்பதை பறைசாற்ற வந்திருக்கும் படமே ‘குக்கூ’.

கதைக்களம்

இதயத்தில் ஆரம்பித்து இதயத்திலேயே தங்கிவிடும் பேரன்பின் ஓசைதான் ‘குக்கூ’வின் மையக்கதை.

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் (உணரும்) ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொருவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான். முடிவில் தமிழ் - சுதந்திரக் கொடியின் தெய்வீகக் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே ‘குக்கூ’.

படம் பற்றிய அலசல்

நல்ல படங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட தற்போதைய பிசினஸ் சினிமா உலகத்தில், வியாபாரத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இப்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த தயாரிப்பு நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் முதல் படம் என்பது ஒரு இயக்குனருக்கு அவரின் சினிமா வாழ்க்கைக்கான அஸ்திவாரம். ஜெயிக்கும் குதிரையின் மேல்தான் இங்கே பந்தயம் கட்டுவார்கள். ஆனால், எழுத்தாளராக எப்படி சிறந்த படைப்புகளை ராஜு முருகன் வழங்கினாரோ அதைப்போலவே தன் முதல் படத்தையும் தரமானதாக தர முயன்றிருக்கிறார். நல்ல இயக்குனர்கள் வரிசையில் உங்களுக்கும் ஒரு இடம் ரெடி ராஜு முருகன்... வாழ்த்துக்கள்!

தமிழ்சினிமாவில் ஏற்கெனவே பார்வையற்றோரைப் பற்றி நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களிலெல்லாம் மைய கதாபாத்திரம் மட்டுமே பார்வையற்றதாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ‘குக்கூ’ முழுக்க முழுக்க பார்வையற்றவர்களின் ஒரு தனி உலகத்தையே படம் முழுவதும் காட்டியிருக்கிறது.

முதல் பாதியில் காமெடி, காதல், பாசம் என மெதுவாக பயணிக்க வைத்து, இடைவேளையில் நெஞ்சை கனக்க வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தந்தாலும், போரடிக்காத இரண்டாம் பாதியும், நெகிழ வைக்கும் க்ளைமேக்ஸுமாக ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியைப் கொடுத்திருக்கிறது ‘குக்கூ’.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் மிகப்பெரிய பலமே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பதுதான். தினேஷ், மாளவிகா இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் மாளவிகா ஒரு படி மேலே நிற்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’கோ என்ற உணர்வு ஏற்படாதவாறு பார்த்திருந்தால் தினேஷும் அடடே அற்புதமப்பா!

ஆனால், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதாபாத்திரம் என்றால், அது தினேஷின் நண்பராக வரும் இளங்கோ என்ற கேரக்டரில் நடித்தவர்தான்.

முதல் பாதி முழுக்க நம்மை சிரிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது இவர்தான்! தினேஷின் இன்னொரு நண்பராக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்கள் இல்லாமல் எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் போன்றவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த சர்ப்ரைஸ் திரையில்!

பலம்

* இதுவரை பார்த்திராத ஒரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற கதைக்களம்.

* கதாபாத்திரத் தேர்வும், அற்புதமான நடிப்பும்!

* படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ‘நச்’ வசனங்கள். உதாரணத்திற்கு.... ‘கண் இருக்கிற ஆம்பளை எங்கயும் இருக்கான்... மனசு இருக்கிற ஆம்பளை எங்கயாவதுதான் கிடைப்பான்’, ‘விட்டுட்டு போயிடுவியா?ன்னு கேட்டா... யாராவது உசுர விடுவாங்களா?’, ‘பொம்பளைங்களை திட்டுறதே ஒரு ஃபேஷனா வச்சுருக்கிங்களாடா?’ என அடுக்கிக் கொண்டே போகலாம்.

* உறுத்தாத ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணி இசையும், பாடல்களும். குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றும் படத்தோடு பார்க்கும்போது நெஞ்சை நெகிழ வைக்கிறது. அற்புதம்!

பலவீனம்

* ரொம்பவும் மெதுவாக நகரும் திரைக்கதை.

* பார்வையற்றவர்களின் மேல் பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட சில காட்சிகள்.

* இன்னும் கொஞ்ச இடங்களில் கத்திரியை வைத்திருக்க வேண்டிய எடிட்டிங்!

* வாய்ப்பிருந்தும் கொஞ்சம் முன்கூட்டியே வைக்கப்படாத க்ளைமேக்ஸ்!

மொத்தத்தில்...

பொழுதுபோக்குவதற்காக எவ்வளவோ படங்கள் வாராவாரம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வரும். அப்படிப்பட்ட படங்களை நாம் வரவேற்பதன் மூலமே மீண்டும் அதை உயிர்பெறச் செய்ய முடியும். பார்வையற்றவர்களோடு நெருங்கிப் பயணிக்க ஒரு உன்னத வாய்ப்பு இந்த ‘குக்கூ’!

ஒரு வரி பஞ்ச் : குக்கூ... குறிஞ்சிப் பூ!

நான் என்ன அடியாட்களை வெச்சு கட்ட பஞ்சாயத்தா நடத்துறேன் –டென்ஷனான சிவகார்த்திகேயன்



மான் கராத்தே பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதற்காக மான் கராத்தே பட குழுவினர் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


விழாவில் தயாரிப்பாளர் மதன், சிவகார்த்திகேயன், அனிருத், ஒளிபதிவாளர் சுகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


படத்தை பற்றி மட்டுமன்றி பத்திரிகையாளர்கள் மான் கராத்தே இசை வெளியீட்டின் போது “பவுன்சர்”களால் நடந்த குளறுபடிகளால் நடந்த பிரச்சனைகளை பற்றி சரமாரியாக கேள்விகனைகளை தொடுத்தனர்.


சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது, “நான் என்னங்க அடியாட்களை வெச்சு கட்ட பஞ்சாயத்தா நடத்துறேன், இன்னிக்கு கூட நான் தனியா தான் வந்துருக்கேன், படங்களுக்கு கூட நான் தனியாதான் போறேன். “பவுன்சர்”கள வேலைக்கு அமர்த்துனது நான் இல்லைங்க” என்றார்.


பின்பு பேசிய படத்தின் தயாரிப்பாளர், “நான் நல்லதா நினைச்சுதான் அவங்கள (“பவுன்சர்”கள) வரவெச்சேன், ஆனா நிலைமை வேற மாதிரி ஆகும்னு நான் நினைக்கல. இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துக்குறேன்.” என்றார்.

தல படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்...!



ஒரு திரைப்படத்தின் வெற்றியில் அப்படத்தின் கதை, ஹீரோவிற்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பது இசை. பெரும்பாலான பிரபல இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்களையே அணுகிவந்துள்ளனர்.


 குறிப்பாக மணி ரத்னம் படங்களுக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளனர். பாடல்களும் மாபெரும் வெற்றிப் பாடல்களாகவும் உருவெடுக்கும். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.


 இயக்குனர் மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற ஜாம்பவான்களின் படங்களிலும் இளையராஜா என்ற ஒரே இசையமைப்பாளர்தான் இன்றுவரையிலும் இசையமைத்துவருகிறார்.


இவ்வகையில் ஒரு இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்குமான நட்பானது மிக முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது. அப்படி இரு நண்பர்களுக்கிடையே உருவாகும் பாடல்கள் மெஹா ஹிட்டாக அமைந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இதே வரிசையில் கௌதம் வாசுதேவ் மேனனும் - ஹாரிஸ் ஜெயராஜும் இருந்துவந்தனர்.


ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கௌதம் மேனனுக்கும், ஹாரிஸ் ஜெயராஜுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.


கௌதம் மேனனும் அவர் இயக்கிய கடந்த சில படங்களுக்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜை அணுகவில்லை. ஆனால் இம்மாத இறுதியில் துவங்கவுள்ள தல அஜித் படத்திற்கு இசையமைக்க மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை அணுகவுள்ளதாகக் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.


இதனைப் பற்றி ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் கௌதம் மேனன் படங்களுக்கு இசையமைக்கும் விருப்பம் தனக்கு இல்லையென்றும் கூறியதாக வதந்திகள் பரவிவருகின்றன.

கௌதம் மேனன் - தல அஜித் இணையவுள்ள புதிய படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கலாம் என்று ஏற்கெனவே பேசப்பட்டுவந்த நிலையில்தான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவிருப்பதாகவும் ஒருதரப்பினர் கூறினர்.


இப்பொழுது எது உண்மை, எது பொய் என்று அறியமுடியாத சூழல் நிலவிவருகிறது. விரைவில் தல படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அறிய ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு கட்டம் கட்டிய விஷால்?



திரைத்துறையில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்வத் ஒன்றும் புதிதல்ல. ஒரு இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ சாதிக்க நினைத்துப் பின்னர் அதே திரைத்துறையில் தான் விரும்பி வந்த வேலையில் சாதிக்காமல் மற்றொரு வேலையினைச் செய்துவருபவர்களும் ஏராளம்.


இன்றைய சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் ஹீரோவாகும் எண்ணத்துடன் திரைத்துறையில் நுழைந்து, பின்னர் தனக்கு இயக்கம்தான் சரிப்பட்டுவரும் என்று இயக்குனராகப் புகழ்பெற்றும் விளங்குகின்றனர்.


அந்தவகையில் ஒரு இயக்குனராகும் கனவுகளோடு திரைப்படத்துறையில் நுழைந்து, உதவி இயக்குனராகவும் பணியாற்றிவந்த விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் கண்டார். அறிமுகப்படமே இவருக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார்.


ஆனால் ஒவ்வொரு ஹீரோவுக்குள்ளும் ஒரு இயக்குனர் உறங்கிக் கிடக்கிறார் என்பதற்குச் சான்றாக விஷாலும் படம் இயக்குவதில் விருப்பம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


ஒருவேளை இயக்குனரானால் முதலில் யார் நடிக்கும் படத்தினை இயக்கவிரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு “ இளையதளபதி விஜய்” என்று கூறியுள்ளாராம். மேலும் விஜயை அடுத்து யாரென்று கேட்கப்பட்டதற்கு விஜய் சேதுபதியை இயக்கவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஷால், இயக்குனர் விஷாலாக அவதாரம் எடுப்பாரா எனபது விரைவில் தெரியவரும். 

கேரள நாட்டிளம் பெண்களுடனே - திரைவிமர்சனம்...!



நடிகர் : அபி சரவணன்

நடிகை : காயத்ரி, தீக்சிதா, அபிராமி

இயக்குனர் : எஸ்.எஸ்.குமரன்

இசை : எஸ்.எஸ்.குமரன்

ஓளிப்பதிவு : யுவா


ஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் நாயகன் அபி சரவணன்.


ஞானசம்பந்தம், ரேணுகாவை மணந்தாலும், காதலித்த கேரளப் பெண்ணை மணக்க முடியாமல் போன வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் தன் மகன் அபிக்கு கேரளப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார்.


ஆனால், மனைவி ரேணுகாவோ மகன் அபிக்கு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.


இந்த சூழ்நிலையில் அபிக்கு தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க தாய் ரேணுகா முடிவு செய்கிறார். அபியோ, போலீஸ் வேலை செய்வதால் அந்தப் பெண்ணை வெறுக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஞானசம்பந்தம்,


அபியை, மனைவி ரேணுகாவிற்கு தெரியாமல் கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சிறு வயது நண்பரோடு தங்கிக் கொண்டு கேரளப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார் அபி.


அங்கு ஒரு பெண் பத்திரிகையாளரை சந்திக்கும் அபி, பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். முதலில் இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகியிடம் காதலை சொல்கிறார். இதற்கு அந்தப் பெண் மறுத்துவிடுகிறார். அதே நேரத்தில் அபிக்கு மற்றொரு மாடல் அழகியிடமும் நட்பு கிடைக்கிறது.


 மாடல் அழகியும், அபியும் பேசுவதைக் கண்ட அபியின் நண்பர், தவறாக புரிந்துக் கொண்டு ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து உங்கள் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான், நீங்கள் வந்தால் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்று சொல்ல அவரும் கிளம்பி வந்து விடுகிறார்.


கேரளா வந்த ஞானசம்பந்தம், மாடல் அழகியிடம் பேசி திருமண நிச்சயதார்த்தத்திற்கு முடிவு செய்து விடுகிறார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அபி, தந்தையிடம் நான் இந்தப் பெண்ணை காதலிக்கவில்லை. வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் தந்தை ஞானசம்பந்தம் அதிர்ச்சியடைகிறார்.


இதற்கிடையில் பெண் பத்திரிகையாளரும் அபியின் காதலை ஏற்றுக்கொள்கிறார். தமிழ்நாட்டில் தாய் பார்த்து வைத்த போலீஸ் பெண்ணும் அபியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.


இறுதியில் தாயின் ஆசை நிறைவேறியதா? தந்தையின் ஆசை நிறைவேறியதா? அல்லது அபியின் காதல் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், தன் யதார்த்தமான நடிப்பில் கதாபாத்திரத்தை பளிச்சிட செய்கிறார். படத்தில் ஆக்‌ஷன், நடனம் எதுவும் இல்லை என்றாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். படத்தில் காயத்ரி, தீக்சிதா, அபிராமி என மூன்று நாயகிகள். இவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கொடுத்து அனைவரையும் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். நாயகிகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


தந்தையான ஞானசம்பந்தம், தாய் ரேணுகா ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமை. இவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. அபியின் நண்பராக வரும் ராஜா, தனி நபராக இருந்து திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.


யதார்த்தமான ஒரு அழகான குடும்ப படத்தை அருமையான திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். படத்திற்கு ஏற்ற தலைப்பு, கதாபாத்திரங்கள், காட்சிகள் என அனைத்திலும் கைதேர்ந்த இயக்குனர் இசையிலும் தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். யுவாவின் தரமான ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.


மொத்தத்தில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ அழகு. 

நல்ல படம் பார்க்க விரும்புவோர்க்கு ஒரு நற்செய்தி...!



அறிமுகப் படத்திலேயே தேசிய விருதுகளை வெல்வது அவ்வளவு ஒன்றும் எளிய விசயமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனை எளியதாக்கி, இரண்டு தேசிய விருதுகளைத் தனது அறிமுகப்படத்திலேயே வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.


கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படத்தின் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜாவிற்கு இது அறிமுகப்படம். ஆனால் படம் பார்த்தவர்கள் இவர் அறிமுக இயக்குனர்தானா என்று வியக்குமளவிற்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக வியந்தனர்.


 விமர்சகர்களும் இப்படத்தினைப் பற்றிப் பாராட்டவே செய்தனர்.ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை அடுத்து தேசியவிருதும் இப்படத்திற்குப் பெருமை சேர்த்தது. இப்படத்தில் ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.


முதல் படம் இயக்கி மூன்றாண்டுகளைக் கடந்துவிட்ட பின்பு, தனது இரண்டாவது படத்தினைப் பற்றி தியாகராஜன் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கவுள்ளதாகவும், இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.


இம்முறையும் தேசியவிருதுகளை இப்படம் குவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.