Sunday 16 March 2014

பாலாவின் பேச்சால் கலங்கிய விஷால்...!



விஷால் நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்குனர் திரு இயக்கியிருக்கும் ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(13.03.14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.


இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், வழக்கமான வாழ்த்துகள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான பேச்சுக்களும் இடம்பெற்றன.


இயக்குனர் பாலா பேசியபோது “நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது.


நான் தான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பேன். காலையில் ஷூட்டிங்கிற்கு ஸ்பாட்டிற்கே 11 மணிக்குத் தான் செல்வேன். இரவு 7.30 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலைக்கு சற்று முன்பு தான் செல்வேன்” என்று கலகலப்பாக பேசினார்.


விஷால் பேசியபோது “ இயக்குனர் பாலாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவன் - இவன் படத்தில் நடித்த சமயத்தில் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன் என்பதை விட 17 நாட்கள் ஒரு ஹீரோயினாக வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.


ஆரம்பத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் நாளாக நாளாக நான் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டேன். ஷூட்டிங்கின் போது கொஞ்சம் கிளாமராக தெரியவேண்டும் என்று கேமராமேன் சில கரெக்‌ஷன் செய்யச்சொன்னபோது,


நடிகைகள் இந்த சமயத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மனமாற உணர்ந்தேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் சரி, முன்பு நடித்த நடிகைகளுக்கும் சரி... அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்” என்று கூறினார்.

மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் விமான ஓட்டிகள் அறையில் புகைபிடித்தார், ஜாலியாக பேசினார் இளம் பெண்..!



ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண் மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி அப்துல் ஹமீது கடந்த 2011ம் ஆண்டு என்னை விமானத்தில் பைலெட்கள் அறைக்கு அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார்.


மேலும் மிகவும் ஜாலியாக பைலட்கள் பேசினார்கள் என்றும் முழு விமானம் முழுவதும் சுற்றினோம் என்றும் கூறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் நானும் எனது தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்தோம்.


அப்போது விமானி அப்துல் ஹமீது எங்களை விமான ஓட்டிகள் அறையில் இருந்து பயணிக்க விருப்பமா என்று கேட்டனர். நாங்களும் சென்றோம். அவர்கள் எங்களுடன் மிகவும் ஜாலியாக பேசினர். புகைப்படம் எடுத்தனர்.


புகைப்பிடித்தனர். அவர்கள் மிகவும் நண்பர்களாக பேசினர். நாங்கள் எங்களது தாய்லாந்து பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி ‘கொஞ்சம் ஒழுக்கம் கெட்ட’ செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஆனால் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஜோந்தி ரோஸ் கூறியுள்ளார். ஹமீத் குடும்பத்திற்கு மற்றும் நண்பர்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


நண்பர் ஹமீது ஓட்டி சென்ற விமானம் மாயமாகியது குறித்து கேள்விபட்டதும் எனது இதயம் வெடித்துவிட்டது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இளம்பெண்ணின் இந்த தகவல் மாயமான விமானம் விவகாரத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவீன யுக பாசமலர்கள் இவங்க தான்...!



காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது வாயை மூடி பேசவும் என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். அடுத்ததாக ஒரு ஜாலியான காதல் கதை ஒன்றை தயார் செய்து தனுஷிடம் சென்று கதையை சொல்லி கால்ஷிட் கேட்டுள்ளார்.


கதையை கேட்டதும் மிகவும் ஆர்வமான தனுஷ், இதுமாதிரியான கதையைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். திரைக்கதையை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.


இதனால் மிகவும் குஷியான பாலாஜி மோகன் தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருக்கிறார் பாலாஜி மோகன்.


கதையையும், ஹீரோவையும் கேட்ட காஜல் அகர்வால் தன்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக நான் நடித்தால் கெமிஸ்ட்ரி செட் ஆகாது. தனுஷையும் என்னையும் அருகில் வைத்து பார்த்தால் தனுஷ் என் தம்பி மாதிரி இருபார். அதனால் ஹீரோவை மாற்றிவிடுங்கள்.


அப்படி மாற்றினால் கண்டிபாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது காஜல் அகர்வால்தான் என்றும் திடீரென அப்போது காஜலை அந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டதற்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதற்கு பழிவாங்கவே இவ்வாறு சொன்னாரா காஜல் அகர்வால்?


இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி மோகன் செய்வதறியாது திகைத்து உள்ளார். தனுஷ் அல்லது காஜல் இவர்களில் யாரையாவது ஒருவரை மட்டும் ஏற்றுக்கொண்டு இன்னொருவரை படத்தில் இருந்து நிக்கவேண்டும். என்ன செய்யப்போகிறார் பாலாஜி மோகன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மோகன்லால் புலம்பிய இயக்குனர்...!



தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இப்படம் மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற பெயரிலும் வெளியானது.


மேலும் மோகன்லால் நடித்த கந்தகார், குருசேத்ரா ஆகிய படங்களையும் மேஜர் ரவி இயக்கினார். இந்நிலையில் இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார்.


இப்படத்தில் நடிக்க மோகன்லாலிடமே கால்ஷீட் கேட்டு வந்தார். கால்ஷீட் தந்துவிடுவார் என்று காத்திருந்த மேஜர் ரவிக்கு மோகன்லால் டிமிக்கி கொடுத்தார்.


இதையடுத்து பிருத்விராஜை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ரவி.


இதன் ஷூட்டிங்கிற்காக சமீபத்தில் பிருத்விராஜ் மற்றும் பட குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர். இந்திய எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரன்,


அதேசூழலில் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரரின் உணர்வுகளையும் மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ட்ரைலரில் நம் வாய்யை மூட வைத்தார் இயக்குனர் பாலாஜி மோகன்...!



காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான், நஸ்ரியா நடிப்பில் வாய்யை மூடி பேசவும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன்.


குறும்படத்திலே தனது திறமையை காட்டியவர் பாலாஜி பின் வெள்ளித்திரையிலும் அவரது திறமை வெளிப்பட்டதை காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.


அவரது இரண்டாவது படமான வாயைமூடி பேசவும் திரைப்படத்தின் இசைவெளியீடு நேற்று சத்யம் சினிமாஸில் வைத்து வெளியிட்டுள்ளனர்.


மணிரத்னம், தெலுங்கு நடிகர் ராணா, செல்வராகவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் காதல் கலந்த காமெடி படமான வாய்யை மூடி பேசவும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை எதிர்நோக்கியுள்ளது.


இதில் ட்ரைலரிலேயே படத்தின் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன், மேலும் இப்படம் மலையாளத்திலும் இதே முக்கிய கதாபாத்திரங்களை வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.

அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய ஸ்ருதிஹாசன்...!



சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன்.


இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன்.


அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும் பிரவேசித்தார்.


அதையடுத்து நடிகை என்ற அரிதாரத்தை பூசிக்கொண்டபோதும், தொடர்ந்து பின்னணியும் பாடிவரும் ஸ்ருதி, தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா என்பவருடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்.


பல மொழிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்திலுள்ள பாடலை தற்போது தமிழ் மற்றும அஸ்ஸாம் மொழிகளில் பாடியுள்ளனர்.


இதில் தமிழில் பாடல் எழுத கமலிடம், ஸ்ருதி கேட்டுக்கொண்டபோது, உடனே எழுதிக்கொடுத்து விட்டாராம்.


ஆக, கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ஜோய்பரூவா ஆகிய மூவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அந்த மியூசிக் ஆல்பம், உலக அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இரட்டை வெடம் போடுவதில் புத்திசாலி ....உலகநாயகன்...!



'உத்தம வில்லன்' படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார். உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார்.


மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார்.


எட்டாம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ம் நூற்றாண்டில் சினிமா ஸ்டார் கமலின் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


சர்வாதிகாரி கேரக்டரில் நாசரும், ஜேகப் ஜக்காரியா கேரக்டரில் ஜெயராமும், ஜேயராம் வளர்ப்பு மகளாக பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.


எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

சொகுசு பங்களாவில் வி.ஐ.பிக்களுடன் நடிகை நக்மா.. காரணம் என்னவோ...!



பாட்ஷா, காதலன், சிட்டிசன், வில்லாதி வில்லன், போன்ற பல படங்களில் நடித்த நடிகை நக்மா தீவிர அரசியலில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


காங்கிரஸ் கட்சியின் மூலம் தனது சேவையை செய்து வரும் நக்மா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்டிருந்தார். நேற்று வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் நக்மாவுக்கு மீரட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


நக்மா காங்கிரஸ் தலைமையிடம் ராஞ்சி தொகுதியைத்தான் கேட்டிருந்தார். ராஞ்சி தொகுதியில் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளபடியால் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று அந்த தொகுதியை குறிவைத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் தலைமை அவருக்கு மீரட் தொகுதியை அளித்துள்ளது.


மீரட் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் நக்மா தனது அதிரடி பிரச்சாரத்தின் மூலம் தொகுதியை கைப்பற்றிவிடுவார் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.


நக்மா பிரச்சார வேலையை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டாரம். மீரட் நகரில் ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளாராம். அந்த பங்களாவிற்கு நகரத்தில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்களை அழைத்து தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்கள் குறித்து டிஸ்கஸ் செய்கிறாராம்.


 அவருடன் டிஸ்கஸ் செய்ய தினந்தோறும் முக்கிய வி.ஐ.பிக்கள் அவருடைய பங்களாவை நோக்கி படையெடுத்தவண்ணம் இருக்கின்றார்கள். இந்த டிஸ்கஷன் எந்த அளவுக்கு பயன் கொடுக்கும் என்பதை தேர்தல் முடிவின்போதுதான் தெரியும்.

தல, தளபதியோடு மட்டுமே டீல் வைக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் ....!



'தீனா' படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இயக்குநர் அடையாளம் கொடுத்தவர் அஜித். இப்போது அஜித்தின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்க்கப்போகிறாராம்.


முருகதாஸ் தற்போது விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிலும், 'துப்பாக்கி'யின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தை ரிலீஸ் செய்வதிலும் மும்மரமாக இருக்கிறார்.


இதே நேரத்தில் முருகதாஸ் தெலுங்குப் படம் இயக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்தபடம் அஜித்துடன் தான் என தெளிவாகக் கூறிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.


படத்தின் பெயர் 'தல' எனக் கூறப்படுகிறது. அஜித்திற்கு 'தீனா' படத்தில் தல என்ற பட்டப்பெயர் வைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அதனை முடித்துவிட்டு 'தல' படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதை தேடும் ரஜினியுடன் ஒரு சந்திப்பு...!



'கோச்சடையான்’ படத்துக்காகத் தான் எழுதிய பாடல் வரிகளை வாசிக்கக் கொடுக்கிறார் 'கவிப்பேரரசு’ வைரமுத்து. வாசித்து முடித்து நிமிர்ந்ததும், 'எப்படி இருக்கு?’ என்று ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார். எத்தனை உயரம் தொட்டாலும், அந்த ஆர்வமும் துடிப்பும் வைரமுத்து ஸ்பெஷல்!

''கோச்சடையான் என்கிற படைத்தலைவன், ஒரு பெரிய போரில் வெற்றிவாகை சூடித் திரும்புகிறான். அவனுக்குப் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல பெயர். அவன் வீரன். அதே நேரத்தில் ஞானம் நிறைந்தவன். மக்கள் அவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள். நடுநடுவே கோச்சடையான், மக்களுக்கு நல்மொழிகளைச் சொல்கிறான். இதுதான் காட்சி.

பாடலை ரஜினியையே பாட வைத்தோம். ஒலிப்பதிவு முடிந்து பாடலைக் கேட்டபோது, காந்தமாக ஈர்த்தது ரஜினியின் குரல். இத்தனைக்கும் அவர் பாடவில்லை. தன் கணீர் குரலில் அந்த வரிகளைத் துணிவும் கனிவுமாக வாசிக்கத்தான் செய்தார். அதற்கே அப்படியொரு வசீகரம்!'' - பாடல் உருவாக்கம் பற்றிய அறிமுகத்துக்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை தனது குரலிலேயே வாசிக்கிறார் வைரமுத்து.

''மக்கள் குழு:

உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம் முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ

உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்

தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ரஜினி:

எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமைகொள்
தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையைவிட
நண்பனின் பகையே ஆபத்தானது.

சூரியனுக்கு முன் எழுந்துகொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா... உயிரா... பெயரா?
மூன்றும் இல்லை - செயல்

'நீ போகலாம்’ என்பவன் எஜமான்
'வா போகலாம்’ என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா... எல்லாம் கொஞ்ச காலம்!

இப்படி, ஒவ்வொரு பாடலையும் புது ட்யூன், எழுதாத மொழி எனக் கலவையாக உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு ரசிகனும் இசைக்கு ஒரு காதும், மொழிக்கு ஒரு காதும் கொடுப்பான் என்று நம்புகிறேன்!''

''பொதுவா பாடல் எழுதும்போது இசையமைப் பாளருக்கும் பாடலாசிரியருக்கும் நிறைய சண்டை வருமே... ரஹ்மான்கூட நீங்க அப்படி சண்டை போட்டிருக்கீங்களா?''

''சண்டை, சர்ச்சைகள் ஆரோக்கியமான விஷயம். சண்டை இல்லாமல் கலை வராது; வளராது. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கும் ரஹ்மானுக்கும் பெரிய சர்ச்சைகள் வரவில்லை. ரஹ்மானோட  ரொம்ப சண்டை வந்தா, நான் அவர் வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து டீ சாப்பிடப் போயிடுவேன். அதை அவரும் புரிஞ்சுப்பார். 'கவிஞர், டீ சாப்பிடுறாரா?’னு விசாரிப்பார்.

ரஹ்மான், ஒரு ஜப்பானியர் மாதிரி. அவருக்குக் கோபம் வந்தா, ரொம்பத் தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருவார். ஏன்னா, ஜப்பானியத் தொழிலாளர்கள் கோபம் வந்தா ஸ்ட்ரைக் பண்ண மாட்டங்க. அதிகமா உற்பத்தி பண்ணிட்டு, அதை விற்க முடியாதபடி பண்ணிருவாங்க.

எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது 'ரட்சகன்’ படத்தின் 'சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?’ பாடல் பதிவில்தான். அதில் அவர் 'ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தை ரொம்பக் கடுமையா இருக்கு. ட்யூன்ல ஒட்டலை. அதை எடுத்திரலாம்’னு சொன்னார். 'நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, அந்த வார்த்தை இல்லைன்னா அந்தப் பல்லவியில் புதுமை இல்லையே...’னு நான் சண்டை போட்டேன். ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கலை. 'சரி பாடுறதுக்கு ஹரிஹரன் வந்துட்டு இருக்கார். அவர் பாடும்போது இடிக்குதுனு சொன்னா எடுத்துருவோம்’னு நான் சொன்னேன். ஹரிஹரன் வந்தார். பாட்டு வரியைச் சொன்னதும், 'ஸோ பியூட்டி!’னு சொல்லிட்டுப் பாடினார். பாடும்போது 'ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தையில் 'ஸ்ட்ராங்’கை மென்மையாப் பாடிட்டார். ட்யூன் இடிக்கலை. பாடல் இன்றும் பெரும் ஈர்ப்புடன் ரசிகர்களைத் தக்கவைத்திருக்கிறது!

அதேபோல 'மின்சார கனவு’ படத்தின் 'ஊலல்ல்லா...’ பாடல் ட்யூனை ரஹ்மான் வாசித்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை. 'நான் இந்த ட்யூனுக்கு பாட்டு எழுதலை’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிறகு, ரஹ்மானும் ராஜீவ் மேனனும் வந்து பேசினாங்க. 'பிரமாதமான ட்யூன் அது. நீங்க நிச்சயம்  பாட்டு எழுதணும்’னு சொன்னாங்க. எனக்கு அப்போ புரியலை. அரை மனசோட எழுதிக் கொடுத்தேன். ஆனா, இசையும் வரிகளுமா பாடல் கம்போஸ் ஆகி வந்தப்போ, அற்புதமா இருந்தது. அந்தப் பாட்டு பிரமாண்ட ஹிட் ஆனதோட, பாடகி சித்ராவுக்கு தேசிய விருதையும் பரிசளித்தது. எங்களுக்குள் நடக்கிற இந்த ஆரோக்கியமான சண்டைகள்தான், நல்ல நல்ல பாட்டுகளை ஊற்றெடுக்க வைக்குது!''

''ரஜினி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாரா?''

''புகைபிடிப்பதைச் சுத்தமா விட்டுட்டார்; மதுவும் தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்துட்டார். முன்னாடி எல்லாம் அவர் நினைச்ச நேரத்துக்குச் சாப்பிடுவார். இப்போ குறித்த நேரத்துக்குச் சாப்பிடுகிறார். மிக அமைதியாக இருக்கிறார். கடந்த 30 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைத்த மனுஷன், இப்போது ஒரு நாளில் 15 மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது துன்பமான காரியம். அந்தத் துன்பத்தையும் அவர் ஏத்துக்கிட்டார்.

சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து வந்தவரை நான் சந்தித்தபோது, ஒரு விஷயம் சொன்னார். 'சென்னை மருத்துவமனையில் எனக்கு எந்தத் துன்பமும் இல்லை; சிங்கப்பூர் மருத்துவ மனையில்தான் நான் ரொம்பத் துன்பப்பட்டேன். அவ்வளவு கடுமையான சிகிச்சை.'மத்தவங்களைப் போல நீங்களும் ஒரு நோயாளி. ட்ரீட்மென்ட் கடுமையா இருக்கும். தாங்கித்தான் ஆகணும்’னு சிங்கப்பூர் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க’ என்றார் சிரித்துக்கொண்டே.

ஏன்னா, சென்னையில் அவர் நோயாளி அல்ல... ரஜினிகாந்த். சிங்கப்பூரில் அவர் ரஜினிகாந்த் அல்ல... நோயாளி. அந்தக் கடுமையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக இப்போ பழைய ரஜினியா, ஆரோக்கியமா, புயல் வேகத்துக்குத் திரும்பிட்டார். பழைய ரஜினியா நடிக்கிறதுக்கான நல்ல கதையைத் தேடிட்டு இருக்கார்!''

இனத்தோடு ஒன்றிய சரிதாவுக்கு சபாஷ்...!



ஈழத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பற்றி படம் எடுத்து வருகிறார் சந்தோஷ் சிவன்.


ஆங்கிலத்தில் சிலோன் என்ற பெயரிலும் தமிழில் இனம் என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.


இதில் அரவிந்த் சாமி, சரிதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சரிதா இப்படத்தில் சுனாமி அக்கா என்ற பெயரில் சுனாமியில் குடும்பத்தை இழந்து,


அனாதை இல்லம் நடத்தி வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறார்.


ஈழத்தமிழர்களின் நிலையை எடுத்துறைக்கும் ஒரு படமாக இனம் தயாரிக்கப்பட்டுள்ளது, இப்படத்தில் சரிதாவுக்கு வலுவான கதாபாத்திரம் என்றும் இப்படம் அவருக்கு ஒரு பெரும் பங்களிப்பை தரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மார்ச் 28 வெளிவரும் இப்படம் தணிக்கை குழுவில் யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்க்கது.

நடிகையை ஆபாசமாக படம் எடுத்த பட அதிபர் ரவிதேவன்...நடந்த்து என்ன..?



விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம் காவேரி தெருவை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (18). சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். உயிருக்கு உயிராக, நாடோடி பறவை போன்ற படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தற்போது ரவி தேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் பாக்யஸ்ரீயை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கியதாக அவரது தாய் நிர்மலா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். தாம்பத்ய உறவு சம்பந்தமான மாத்திரை அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை என் மகள் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் செல்வது போல் ஆபாசமாக காட்சிகளை எடுக்க முயன்றனர் என்று புகாரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பட அதிபர் ரவிதேவன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–

மும்பை நிறுவனம் ஒன்று காமசூத்ரா விளம்பர படம் ஒன்றை எடுத்து தரும்படி அணுகியது. அதற்கான கதையை தயார் செய்து பாக்யஸ்ரீயை ஒப்பந்தம் செய்தோம். படுக்கை அறைக்குள் கிளாசில் பால் கொண்டு செல்வதற்கு பதில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போல் காட்சியை எடுத்தோம். இதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அதன் பிறகுதான் பாக்யஸ்ரீ தாயார் நிர்மலா ஆட்சேபனை கிளப்பினார். நடிக்க பிடிக்காவிட்டால் முதலிலேயே மறுத்து இருக்கலாம். நடித்து முடித்து விட்டு காட்சிகளை நீக்க சொல்வது வியப்பாக உள்ளது. படத்தில் படுக்கையறை காட்சிகளை எடுக்கவில்லை. பாக்யஸ்ரீயை ஆபாசமாகவும் காட்டவில்லை. தற்போது போனில் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. பெரும் தொகை கொடுத்தால் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக மர்ம நபர்கள் பேசுகின்றனர். பணம் பறிக்க சதி நடக்கிறது. போலீசாரிடம் உண்மை விவரங்களை மனுவாக எழுதி கொடுத்துள்ளேன்.

இவ்வாறு ரவி தேவன் கூறினார்.

மீடியாக்களின் டார்ச்சரால் கோபத்தில் உளறிய கமல்...!



ரஜினி, கமல் மாதிரியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலே ஊடகங்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸை சாப்பிட்ட திருப்தி தான். அந்தப்படத்தை ஆரம்பிக்கும் போதே ஆளாளுக்கு ஒரு கதையை எழுதி அதை படத்தின் கதையாக்கி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள்.

இந்த மாதிரியான மீடியாக்களின் சின்சியர் வேலைகள் பல நேரங்களில் சம்பந்தப்பட்ட படங்களுக்கு எதிர்வினையைத் தான் உண்டு பண்ணியிருக்கின்றன.

இதையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்த கமல் தனது ‘உத்தம வில்லன்’ படத்தின் கதையை வேண்டுமென்றே ‘லீக்’ செய்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு பிரெஞ்ச் புகைப்படக்காரர் எடுத்த போட்டோவின் காப்பி என்று நெகட்டீவ் செய்திகளை ஊடகங்கள் பரப்பியதில் அப்செட்டான கமல் படத்தின் கதை என்ற பெயரில் ஆளுக்கொரு கதையை எழுதி விடக்கூடாது என்று அவசரம் அவசரமாக உத்தம வில்லன் கதையை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

அதில் ‘உத்தமன்’ என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமாவின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாகவும் மற்றொரு கேரக்டரில் நடிக்கிறார்.

மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.

8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனில் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன் சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஆக 8- ஆம் நூற்றாண்டில் கூத்துக் கலைஞனாகவும், 21- ஆம் நூற்றாண்டில் உச்ச சினிமா நட்சத்திரமாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதால், இது கமலின் சொந்தக் கதையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் கூடவே கிளப்பி விட்டிருக்கிறார் கமல்.

சென்டிமெண்ட்டை மாற்றாத விஜய்...!



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா இணைந்து நடித்துவரும் புதிய படத்தின் முக்கிய வில்லன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகரான நீல் நித்தின் முகேஷ் விஜயின் வில்லனாக நடிக்கவுள்ளதாக முருகதாஸ் அறிவித்துள்ளார். வங்காள நடிகரான தோட்டா ராய் இப்படத்தின் வில்லனாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் முக்கிய வில்லன் இல்லை என்றும், முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபரைத் தேடிவருவதாகவும் முருகதாஸ் முன்னர் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதல் படமான துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யூ ஜம்மாவாலும் பாலிவுட் நடிகர்தான்.பில்லா -2 படத்தில் தமிழுக்கு அறிமுகமான வித்யூ ஜம்மாவால் பின்னர் விஜயின் துப்பாக்கியில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்பொழுது சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகரான வித்யூ ஜம்மாவாலை அடுத்து, விஜய் - முருகதாஸ் கூட்டணியின் முக்கிய வில்லனாகியிருக்கிறார் நீல் நித்தின் முகேஷ்.
ஹீரோவாக மட்டுமல்லாது, முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் நித்தின் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

விஜய் - சமந்தா நடித்துவரும் இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ஐங்கரன் இண்டர்நேசனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. அனிருத் இசையமைத்துவருகிறார். இவ்வாண்டு தீபாவளி வெளியீடாக இப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் ஸ்டாப் - திரைவிமர்சனம்...! நான் ஸ்டாப் ஆக்‌ஷன் தான்...!



150 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்படுகிறது ஒரு தனியார் விமானம். இதில் பயணிகளின் ரகசிய பாதுகாவலராக பயணிகள் போல் நாயகன் நீசன் பயணிக்கிறார். இவருடன் மற்றொரு காவலரும் செல்கிறார். 6 வயது சிறுமி இறந்த துக்கத்தில் பயணம் செல்கிறார் நீசன்.


இந்நிலையில் நீசனின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. இதில் விமானம் நல்லபடியாக போய் சேர வேண்டுமானால் என்னுடைய அக்கவுண்ட் நம்பருக்கு 150 மில்லியன் டாலர் பணத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவராக இறப்பார்கள் என்று வருகிறது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைகிறார்.


இந்த மெசேஜை யார் அனுப்பியது என்று அறிய அந்த நம்பருக்கு பதில் மெசேஜ் அனுப்புகிறார். சிறிது நேரம் இப்படியே உரையாடல் நடக்கிறது. நீசன் பதட்டமாக இருப்பதைக் கண்டு, இவருடன் வந்த மற்றொரு காவலர் விசாரிக்க, நீசன் அவர் மீது தவறாக சந்தேகப்பட்டு விசாரிக்கிறார். இதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, அந்த காவலரை கொன்று விடுகிறார் நீசன்.


அதன்பிறகும் நீசன் செல்போனுக்கு மெசேஜ் வருகிறது. விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தான் தனக்கு மெசேஜ் அனுப்புகிறார் என்று அறிந்து கொண்டு விமானத்தில் அவரை தேடுகிறார். இதற்கிடையில் அடுத்த 20 நிமிடத்தில் விமானி மர்மமான முறையில் இறந்து விடுகிறார். தன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் செல்போனை ஒரு பயணிடம் இருந்து கண்டு பிடிக்கிறார். பிறகு அந்த பயணியும் இறந்துவிடுகிறார்.


இறுதியில் விமானத்தில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடித்தாரா? பயணிகளை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.


நாயகன் நீசன், தன்னுடைய அருமையான நடிப்பால் காட்சிகளுக்கு மிளிருட்டுகிறார். குறிப்பாக மெசேஜை கண்டு பதட்டம் அடையும் காட்சிகள் அருமை. படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கூடுதல் பலம். விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சிகள் அதை எடுத்த விதம் சபாஷ் போட வைக்கிறது. விமானத்தில் நடக்கும் கதையை உருவாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.


மொத்தத்தில் ‘நான் ஸ்டாப்’ நான் ஸ்டாப் ஆக்‌ஷன்.