Friday 21 March 2014

கேரள நாட்டிளம் பெண்களுடனே - திரைவிமர்சனம்...!



நடிகர் : அபி சரவணன்

நடிகை : காயத்ரி, தீக்சிதா, அபிராமி

இயக்குனர் : எஸ்.எஸ்.குமரன்

இசை : எஸ்.எஸ்.குமரன்

ஓளிப்பதிவு : யுவா


ஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் நாயகன் அபி சரவணன்.


ஞானசம்பந்தம், ரேணுகாவை மணந்தாலும், காதலித்த கேரளப் பெண்ணை மணக்க முடியாமல் போன வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் தன் மகன் அபிக்கு கேரளப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார்.


ஆனால், மனைவி ரேணுகாவோ மகன் அபிக்கு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.


இந்த சூழ்நிலையில் அபிக்கு தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க தாய் ரேணுகா முடிவு செய்கிறார். அபியோ, போலீஸ் வேலை செய்வதால் அந்தப் பெண்ணை வெறுக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஞானசம்பந்தம்,


அபியை, மனைவி ரேணுகாவிற்கு தெரியாமல் கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சிறு வயது நண்பரோடு தங்கிக் கொண்டு கேரளப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார் அபி.


அங்கு ஒரு பெண் பத்திரிகையாளரை சந்திக்கும் அபி, பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். முதலில் இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகியிடம் காதலை சொல்கிறார். இதற்கு அந்தப் பெண் மறுத்துவிடுகிறார். அதே நேரத்தில் அபிக்கு மற்றொரு மாடல் அழகியிடமும் நட்பு கிடைக்கிறது.


 மாடல் அழகியும், அபியும் பேசுவதைக் கண்ட அபியின் நண்பர், தவறாக புரிந்துக் கொண்டு ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து உங்கள் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான், நீங்கள் வந்தால் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்று சொல்ல அவரும் கிளம்பி வந்து விடுகிறார்.


கேரளா வந்த ஞானசம்பந்தம், மாடல் அழகியிடம் பேசி திருமண நிச்சயதார்த்தத்திற்கு முடிவு செய்து விடுகிறார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அபி, தந்தையிடம் நான் இந்தப் பெண்ணை காதலிக்கவில்லை. வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் தந்தை ஞானசம்பந்தம் அதிர்ச்சியடைகிறார்.


இதற்கிடையில் பெண் பத்திரிகையாளரும் அபியின் காதலை ஏற்றுக்கொள்கிறார். தமிழ்நாட்டில் தாய் பார்த்து வைத்த போலீஸ் பெண்ணும் அபியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.


இறுதியில் தாயின் ஆசை நிறைவேறியதா? தந்தையின் ஆசை நிறைவேறியதா? அல்லது அபியின் காதல் ஆசை நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், தன் யதார்த்தமான நடிப்பில் கதாபாத்திரத்தை பளிச்சிட செய்கிறார். படத்தில் ஆக்‌ஷன், நடனம் எதுவும் இல்லை என்றாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். படத்தில் காயத்ரி, தீக்சிதா, அபிராமி என மூன்று நாயகிகள். இவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கொடுத்து அனைவரையும் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். நாயகிகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


தந்தையான ஞானசம்பந்தம், தாய் ரேணுகா ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமை. இவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. அபியின் நண்பராக வரும் ராஜா, தனி நபராக இருந்து திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.


யதார்த்தமான ஒரு அழகான குடும்ப படத்தை அருமையான திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். படத்திற்கு ஏற்ற தலைப்பு, கதாபாத்திரங்கள், காட்சிகள் என அனைத்திலும் கைதேர்ந்த இயக்குனர் இசையிலும் தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். யுவாவின் தரமான ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.


மொத்தத்தில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ அழகு. 

0 comments:

Post a Comment