Friday 21 March 2014

இன்றைய சினிமா; குக்கூ - திரைவிமர்சனம்!!!...சபாஷ்...!




தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

இயக்கம் : ராஜு முருகன்

நடிப்பு : தினேஷ், மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ்

ஒளிப்பதிவு : பி.கே.வர்மா

இசை : சந்தோஷ் நாராயணன்

எடிட்டிங் : ஷண்முகம் வேலுச்சாமி

பஸ்களிலும், ரயில்களிலும் நாம் பயணிக்கும்போது எத்தனையோ பார்வையற்றோரைக் கடந்து வந்திருப்போம். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள்! ஆனால், அவர்களுக்கும் ஒரு உலகம் இருக்கிறது. அவர்களுக்கும் பார்வை இருக்கிறது, ரசனை இருக்கிறது, அன்பு இருக்கிறது, கோபம் இருக்கிறது, காதல் இருக்கிறது என்பதை பறைசாற்ற வந்திருக்கும் படமே ‘குக்கூ’.

கதைக்களம்

இதயத்தில் ஆரம்பித்து இதயத்திலேயே தங்கிவிடும் பேரன்பின் ஓசைதான் ‘குக்கூ’வின் மையக்கதை.

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் (உணரும்) ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொருவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான். முடிவில் தமிழ் - சுதந்திரக் கொடியின் தெய்வீகக் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே ‘குக்கூ’.

படம் பற்றிய அலசல்

நல்ல படங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட தற்போதைய பிசினஸ் சினிமா உலகத்தில், வியாபாரத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இப்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த தயாரிப்பு நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் முதல் படம் என்பது ஒரு இயக்குனருக்கு அவரின் சினிமா வாழ்க்கைக்கான அஸ்திவாரம். ஜெயிக்கும் குதிரையின் மேல்தான் இங்கே பந்தயம் கட்டுவார்கள். ஆனால், எழுத்தாளராக எப்படி சிறந்த படைப்புகளை ராஜு முருகன் வழங்கினாரோ அதைப்போலவே தன் முதல் படத்தையும் தரமானதாக தர முயன்றிருக்கிறார். நல்ல இயக்குனர்கள் வரிசையில் உங்களுக்கும் ஒரு இடம் ரெடி ராஜு முருகன்... வாழ்த்துக்கள்!

தமிழ்சினிமாவில் ஏற்கெனவே பார்வையற்றோரைப் பற்றி நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களிலெல்லாம் மைய கதாபாத்திரம் மட்டுமே பார்வையற்றதாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ‘குக்கூ’ முழுக்க முழுக்க பார்வையற்றவர்களின் ஒரு தனி உலகத்தையே படம் முழுவதும் காட்டியிருக்கிறது.

முதல் பாதியில் காமெடி, காதல், பாசம் என மெதுவாக பயணிக்க வைத்து, இடைவேளையில் நெஞ்சை கனக்க வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தந்தாலும், போரடிக்காத இரண்டாம் பாதியும், நெகிழ வைக்கும் க்ளைமேக்ஸுமாக ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியைப் கொடுத்திருக்கிறது ‘குக்கூ’.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் மிகப்பெரிய பலமே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பதுதான். தினேஷ், மாளவிகா இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் மாளவிகா ஒரு படி மேலே நிற்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’கோ என்ற உணர்வு ஏற்படாதவாறு பார்த்திருந்தால் தினேஷும் அடடே அற்புதமப்பா!

ஆனால், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதாபாத்திரம் என்றால், அது தினேஷின் நண்பராக வரும் இளங்கோ என்ற கேரக்டரில் நடித்தவர்தான்.

முதல் பாதி முழுக்க நம்மை சிரிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது இவர்தான்! தினேஷின் இன்னொரு நண்பராக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்கள் இல்லாமல் எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் போன்றவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த சர்ப்ரைஸ் திரையில்!

பலம்

* இதுவரை பார்த்திராத ஒரு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற கதைக்களம்.

* கதாபாத்திரத் தேர்வும், அற்புதமான நடிப்பும்!

* படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ‘நச்’ வசனங்கள். உதாரணத்திற்கு.... ‘கண் இருக்கிற ஆம்பளை எங்கயும் இருக்கான்... மனசு இருக்கிற ஆம்பளை எங்கயாவதுதான் கிடைப்பான்’, ‘விட்டுட்டு போயிடுவியா?ன்னு கேட்டா... யாராவது உசுர விடுவாங்களா?’, ‘பொம்பளைங்களை திட்டுறதே ஒரு ஃபேஷனா வச்சுருக்கிங்களாடா?’ என அடுக்கிக் கொண்டே போகலாம்.

* உறுத்தாத ஒளிப்பதிவும், அற்புதமான பின்னணி இசையும், பாடல்களும். குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றும் படத்தோடு பார்க்கும்போது நெஞ்சை நெகிழ வைக்கிறது. அற்புதம்!

பலவீனம்

* ரொம்பவும் மெதுவாக நகரும் திரைக்கதை.

* பார்வையற்றவர்களின் மேல் பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்ட சில காட்சிகள்.

* இன்னும் கொஞ்ச இடங்களில் கத்திரியை வைத்திருக்க வேண்டிய எடிட்டிங்!

* வாய்ப்பிருந்தும் கொஞ்சம் முன்கூட்டியே வைக்கப்படாத க்ளைமேக்ஸ்!

மொத்தத்தில்...

பொழுதுபோக்குவதற்காக எவ்வளவோ படங்கள் வாராவாரம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட நல்ல படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வரும். அப்படிப்பட்ட படங்களை நாம் வரவேற்பதன் மூலமே மீண்டும் அதை உயிர்பெறச் செய்ய முடியும். பார்வையற்றவர்களோடு நெருங்கிப் பயணிக்க ஒரு உன்னத வாய்ப்பு இந்த ‘குக்கூ’!

ஒரு வரி பஞ்ச் : குக்கூ... குறிஞ்சிப் பூ!

0 comments:

Post a Comment