இது தேர்வுகளின் காலம். அழிக்கவே முடியாத நினைவுகளின் இங்க் நம் விரல்களின் ரேகைகளில் நிரந்தரமாய் படிந்திருக்கிறது.
ஸ்லேட் குச்சி, பென்சில் என பரிணாம வளர்ச்சி யடைந்து இங்க் பேனாவால் எழுதப்போகும் நாட்களுக்காகக் காத்திருப்போம். கண்டிப்பாக நம் முதல் இங்க் பேனாவை ரொம்ப வருடங்களுக்கு பத்திரமாய் வைத்திருப்போம். இன்றும் கூட சிலர் வைத்திருக்கலாம்.
பேனாக்களை வாங்கப் போவதே ஒரு சுகம். கடைக்கு சென்று இங்க் பேனா என்றதும் இரண்டு, மூன்று பாக்சை திறந்து வைப்பார்கள். கலர் கலராக நம்மை பார்த்து சிரிக்கும் பேனாக்களில் இருந்து, எதை தேர்ந்தெடுப்பதென முழிப்போம்,
இறுதியாக, நமக்கு ராசியான நிற பேனாவை எடுத்து, நிப்பை இங்கில் நனைத்து பிடித்த பெயரையோ, பிள்ளையார் சுழியையோ எழுதிப் பார்ப்போம். முதல் எழுத்து எழுதும் போதே மனசு சொல்லும், “டேய்.. இவ உனக் கானவடா... இனிமே உன் பாக்கெட்ல இருந்து இதயத்தை உரசிக்கிட்டிருக்க போறா!!!”.
என் பேனாவை வேறு யாராவது எடுத்து எழுதினால் பிடிக்கவே பிடிக்காது. விடாப்பிடி யாக “ஒரு நிமிஷம் பேனா கொடேன்... எழுதிட்டு தர்றேன்” என யார் கேட்டாலும் மூடியை கழற்றிக்கொண்டுதான் கொடுப்பேன். அப்போதுதான் பேனா திரும்ப வரும். பேனாவிற்கு இங்க் போட, இன்று காருக்கு பெட்ரோல் போடுவதை விட அதிக கவனம் எடுத்த நாட்கள் அவை.
துரை கடையில் தான் சுத்தமான, கெட்டியான ப்ரில் இங்க் கிடைக்கும். ஆர்.பி. கடையில், அப்போதே கலப்பட இங்க்தான். கேம்லின் இங்கில் தண்ணீர் கலந்து விற்பார்கள். எழுதினால் வெளுத்தது போல இருக்கும்.
சில நேரம் நண்பர்களிடம் ஐந்து சொட்டு, பத்து சொட்டு இங்க் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் வரும். சிலர் ஐந்து சொட்டுக்கு மேல் கடன் கொடுக்க மாட்டார் கள். ஊத்தும்போது ஒரு சொட்டு கீழே விழுந்துவிட்டாலும், அதுவும் நம்ம கணக்குதான். அதிலும், காதலிப்பவர்கள் காதலியிடம் இங்க் கடன் வாங்குவதற்காகவே ‘இங்க்’கை கீழே ஊற்றிவிட்டு கடன் கேட்பார்கள்.
அவள் பேனாவில் இருந்து அவன் பேனாவுக்கு, சொட்டு சொட்டாக இங்க் இறங்குவது இதயம் துடிப்பது போலவும், இளையராஜா மெட்டு போடுவது போலவும் இருக்கும். மேலும் பேனா மூடியால் விசிலடித்து காதலியை திரும்பிப் பார்க்க வைப்பதிலும் அவ்வளவு சந்தோஷம்.
வகுப்பில் ஒருவன் உஜாலா சொட்டு நீலம் போட்ட வெள்ளை சட்டையோடு வந்துவிடக் கூடாது. எப்படித்தான் இங்க் அடிப்பார்களோ, வீட்டுக்குப் போகும் போது ஒரு மாடர்ன் ஆர்ட் கண்டிப்பாய் அவன் சட்டையில் இருக்கும். நமக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நட்பு எதிரிகள் வேறு எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள், “இங்க பாருடி.. பேனாவை திறந்தே வச்சிருக்கோம்.. யாராவது பெஞ்சில சாஞ்சீங்க.. அம்புட்டுதான் சட்டை...” என, ஏவுகணைகளாக பேனாக்கள் பின் பெஞ்சில் வரிசை கட்டியிருக்கும்.
இந்த இங்க் பேனாக்களில் பலவகை உண்டு. இங்க் எவ்ளோ இருக்கிறதென தெரியும் கண்ணாடி பேனா, மர பேனா, குட்டி பேனா, குண்டு பேனா, ஒல்லி பேனா, என அப்பப்போ பேனாக்கள் ரிலீஸ் ஆகி கலக்கும். கேமல், லக்சர் என உள்நாட்டு பேனாக்களின் காலத்தில்தான் திடீர் என்ட்ரி கொடுத்தார் ஹீரோ. அதுவும் தங்க நிற மூடியோடு. அவ்வளவுதான், ஹீரோ பேனா வைத்திருப்பவன்தான் ஹீரோ. எனக்கும் முத்து மச்சான் அந்தமான்ல இருந்து ஹீரோ பேனா கொண்டுவந்து கொடுத்தார்.
அதை சட்டையில் சொருகிக்கொண்டு சுற்றும் போது, ஏதோ தங்க மெடலை சொருகியிருப்பது போல பெருமை பொங்கும். என்னுடன் படித்த ‘சாரி’ சங்கர், பள்ளிக்கூடத்திலேயே எல்லோருக்கும் வட்டிக்கு விடுவான். ஒரு ரூபாய்க்கு பத்து பைசா பிடித்துக்கொண்டு தொண்ணூறு பைசா தருவான்.
வாங்கி தின்பதற்காக அவனிடம் இரண்டு ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். சொன்னபடி திருப்பி தரமுடியாததால், என் ஹீரோ பேனாவை ஜப்தி செய்துவிட்டான். வட்டியும் முதலுமாக திருப்பி அடைத்து அதை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இங்க் பேனாக்களை நமக்கு வசமாக பழக்குவதே ஒரு கலை. ஒரே கோணத்தில் பிடித்து சாய்வாக எழுதி, நிப்பை கண்ணாடியில் தேய்த்து, பிளேடால் கீறி, சீர்படுத்துவோம். இப்படி, தயாராகும் பேனாவை களவாண்டு போகவே ஒரு கூட்டம் இருக்கும். நம் மேல் இருக்கும் பகையில் பேனாவின் நிப்பை உடைத்தோ, வளைத்தோ வைத்து விடுவார் கள். இவர்களிடம் இருந்து பேனாவை காப்பாற்றுவதற்காக எப்போதும் பேனாவை பாக்கெட்டில் சொருகியபடியே சுற்றவேண்டும்.
தேர்வுக்கு முதல்நாள் பேனாவை கழற்றி, அலசி, காயவைத்து, புது இங்க் நிரப்புவதே தனி சுகம். இதையெல்லாம் பார்த்துவிட்டு நம் வீட்டிலோ, “படிக்கிறத தவிர மத்ததெல்லாம் நல்லா பண்ணு...” என பாராட்டு பத்திரம் வாசிப்பார்கள். பரீட்சை எழுத இரண்டு, மூன்று பேனாவுடன் வருபவர்கள் மத்தியில், சிலர் இங்க் பாட்டிலோடு வருவார்கள். அவ்வளவு முன்ஜாக்கிரதையாம்.
கடைசியில் பரிட்சை முடிந்ததும், இங்க் அடித்து கொண்டாடினால்தான் ஒரு முழுமையே அடைவோம். இப்படி சந்தோஷங்களில் மட்டு மல்ல, சண்டைகளின் காயங்களிலும் இங்க் இருக்கும். கீழே விழுந்தாலும், கட்டி புரண்டு சண்டை போட்டாலும், தீப்புண் ஏற்பட்டாலும் காயங்களின் மேல் இங்க்கையே தடவுவோம். அதுதான் எங்களின் சர்வரோக நிவாரணி.
இப்படி இங்க் பேனாக்கள் தனிக்காட்டு ராஜாவாக ஆண்ட காலகட்டத்தில்தான் வெள்ளை நிற ரெனால்ட்ஸ் பால் பேனாக்கள், படையெடுக்கத் தொடங்கின. முழுபரிட்சை யெழுத பால் பேனாக்களுக்கு சில ஆசிரியர்க ளின் ஆதரவும், பலரின் எதிர்ப்பும் நிலவ எங்களுக்கோ பயங்கர குழப்பம். பிறகு தலைமையாசிரியரிடம் இருந்து பால் பேனாவை உபயோகிக்கலாம் என்று சர்க்குலர் வந்தது நினைவிருக்கிறது.
இன்றும் கம்ப்யூட்டரில், ஸ்கிரிப்ட்டை டைப் செய்து பிரிண்ட்அவுட் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் போனாலும், முதலில் அந்த காட்சி களை பேனா பிடித்து அடித்து, திருத்தி, கோடு போட்டு எழுதுவதில் இருக்கும், ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைப்பதே இல்லை.
இப்படி என் வாழ்வில் என்னுடன் ஏராள மான, ‘பென்’கள் பயணித்திருந்தாலும் (பெண்கள் அல்ல, பேனாக்கள்!) இன்றும் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பேனா, ‘வம்சம்’ படத்தின்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர், எனக்கு கொடுத்த பேனா. தனது வாழ்வின் பெரும்பகுதியில், எழுதிக்கொண்டே இருந்தவர், இருப்பவர் கலைஞர் அவர்கள். இன்றும் அவர் எழுதிப்பார்த்து கொடுத்த பேனாவை பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்.
நாம் கைத்தட்டி ரசித்த டூரிங் டாக்கீஸ், அழுது சிரித்து எழுதிய கடிதங்கள், ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டைகள், மக்கிய மட்டை கொஞ்சம், கோழி எச்சம் கொஞ்சம், செங்கல் தூள் கொஞ்சம் வைத்து, அரைத்து பூசி அழகு பார்த்த மருதாணிகள், இவையெல்லாம் மெல்ல மெல்ல காணாமல் போனது போல, ‘இங்க்’ பேனாவும் மெல்ல மெல்ல நம்மை விட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கிறதே!
0 comments:
Post a Comment