Tuesday, 11 March 2014

அமரா - திரை விமர்சனம்...!



ஊரில் வெட்டி ஆபீசர் வேலை பார்ப்பவர் ஹீரோ அமரன். தம், தண்ணி என்று தெனாவட்டு காட்டும் ஹீரோவை, திருமணத்துக்கு பெண் பார்க்க செல்லும் நண்பன் தவிர்க்கிறான்.


காரணம் தெரிந்து ஷாக் ஆகும் ஹீரோ, திருந்தி வாழ நினைக்கிறார். அத்தை நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்கிறார். அங்கு போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் சம்பத்தை இவர் அடிக்க, வில்லங்கம் விபரீதமாகிறது.


பிறகு அங்கிருந்து சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார். ரயிலில் ஹீரோயினை சந்திக்க, சினிமா இலக்கணப்படி பார்த்த உடனேயே காதல் வந்துவிடுகிறது. ஹீரோயின் யாரென்று பார்த்தால், சாதிக் கட்சி தலைவரின் மகள்.


காதலை எதிர்க்கிறார் என்பதால், அவரிடமிருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இவர்களை ஒருவர் எதேச்சையாக புகைப்படம் எடுக்க, அமைச்சர் மகள் காதலனுடன் ஓட்டம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அமரனை காதலன் என்று அமைச்சர் துரத்த, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.


வெட்டி ஆபீசர் கேரக்டருக்கு பொருந்துகிறார் அமரன். அடுத்த படத்தில் நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அவருக்கான காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறது. ஹீரோயின் ஸ்ருதி அழகாக இருக்கிறார்.


மற்றபடி நடிக்க வாய்ப்பு குறைவு. பிஸ்கட் மயக்கத்தில் ஹீரோவுடன் இருந்துவிட்டு மறுநாள், ‘நீ யாருடா’ என்று எகிறுவது முதல் அவருக்கான காட்சிகள் அழகாக இருக்கிறது. ஆனால், எதுவும் மனதில் பதியவில்லை.


 சாதிக் கட்சி தலைவராக நடித்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆறுதல் தருகிறார். சம்பத் பெரிதாக ஏதோ செய்வார் என்று பார்த்தால், ம்ஹும். கஞ்சா கருப்பு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் அருமை. மற்றபடி சொல்வதற்கு எதுவும் இல்லை.

0 comments:

Post a Comment