Thursday 13 March 2014

உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?



“வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ விரதம் இருப்பது உடலுக்கு நல்லது’ – இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்களின் நம்பிக்கை இதுதான். ஆனால் அதில் உள்ள நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளாமலே பலர் விரதம் இருக்கிறார்கள்.

நோஞ்சானாக இருப்பார். “நான் இன்னைக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்.. விரதம் இருக்கேன்’ என்பார். யார் யார்? எது எதற்கு? எப்படி? விரதம் இருப்பது? என்ற முறை உள்ளது. அது தெரியாமல், உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அளவிற்கு கண்மூடித்தனமாக விரதம் இருக்கிறார்கள். அது பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
ஒரு நாள் வயிறைக் காயப் போட்டால் உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகள் சுத்திகரிக்கப்படும். ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்தால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது உண்மைதான். ஆனால் அது முறைப்படி விரதம் இருப்பவர்களுக்குதான்.

எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?

15 வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் எந்த வகையான விரதமும் இருக்கக் கூடாது. விரதம் இருக்கும் போது, நம் உடலில் உள்ள உயிரி ரசாயனங்கள் வயிற்றுக்குக் கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகளும் முதியவர்களும் இறந்து போக வாய்ப்பு உண்டு.

நீண்ட நாட்கள் விரதம் இருந்தால் என்னாகும்?

நாம் உண்ணும் உணவானது முதலில் குளூக்கோஸாகவும் கொழுப்பாகவும்
அமினோ அமிலமாகவும் பிரித்து எடுக்கப்பட்டு விடும். இதில் குளுக்கோஸ்தான் மிக முக்கியம். நம் உடலுக்குத் தேவையான சக்தி இதிலிருந்துதான் எடுக்கப்படுகிறத. இப்போது நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் சோர்வு தட்டும். அதாவது சக்தி இழக்க நேரிடும். அந்த சக்தியை உடல் சேமித்து வைத்துள்ள குளுக்கோஸை கரைத்துத்தான் உடலானது எடுத்துக் கொள்ளும். குளுக்கோஸை தீர்ந்த பின்னர் உடலில் உள்ள கொழுப்பை எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் தீர்ந்த பின்னர் அதீத பசி எடுக்கும். அப்போதும் உணவு உண்ணாமல் விரதத்தைத் தொடர்ந்தால் தசைகள் வளர்சிதை மாற்றமடைந்து, தோல் சுருங்கி முகம் வாடத் தொடங்கிவிடும்.

உடலில் எலக்ட்ரோலைட் குறைந்தவிடும். இதனால் இதயம் வேகமாகத் தாறுமாறாக துடிக்கத் தொடங்கும். சிறுநீரகம் சரிவர வேலை செய்யாமல் போய்விடும். மேலும் பட்டினி தொடர்ந்தால் மரணம் கூட சம்பவிக்கும்.

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

கொழுப்பையும் இரத்தத்தையும்ண சுத்திகரிக்க விரதம் இருப்பத நல்லது என்றே இப்போது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு ஆகிய குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்கிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க விரதம் இருக்கிறார்களே அது சரியா?

உடல் எடையைக் குறைக்க விரதம் இருப்பது சரியல்ல. உணவு சாப்பிடாத அந்த நாட்களில் அவர்கள் கோபப்படுவதும் எரிச்சலடைவதும்தான் அதிகரிக்கும் இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. விரதம் முடிந்த பின்னர் பசியை அடக்க அதிகளவு உணவை உண்ணத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களை மேலும் உடல் எடையைக் கூட்ட வைக்கிறது.

சரி, விரதம் எப்படி இருந்தால் நல்லது?


1. குறைந்தளவு உணவு அதாவது ஒருவேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. இதனால் உடலின் இன்சுலின் சுரப்பது, கொழுப்புச் சத்து குறைவது, எடை குறைவது ஆகிய நன்மைகள் ஏற்படும்.

2. மன அழுத்தம், சோர்வு நீங்க குறைந்தபட்ச அளவில் வயிற்றைப் பட்டினி போடுவது நல்லது.

3. தண்ணீர் கூட குடிக்காமல், விரதம் இருக்கக் கூடாது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர்தான் செய்யும். தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்தால், கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும்.

4. பெண்கள் மதம், பக்தி, நம்பிக்கை அடிப்படையில் அடிக்கடி விரதம் இருப்பது கூடாது. அது ரத்தசோகை நோயை உண்டாக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் வர அதுவும் ஒரு காரணமாகிவிடும்.

5. வாரமோ மாதமோ ஒருநாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடையச் செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும். அதனால் இளமையுடன் இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

0 comments:

Post a Comment