Thursday 13 March 2014

சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகம்! புதுப்பொலிவுடன்!!



               நிகழ்கால சினிமாவுக்கு சவால்விடும் அளவிற்கு புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் வரும் வெள்ளி அன்று (14.03.2014) வெளியாக உள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ஹீரோயிசம் அவருக்கு மட்டுமே பொருந்தி இருப்பதை இன்றைய இளைஞர்களும் உணர ஒரு வாய்ப்பாக இப்படம் உள்ளது.

1965யில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் தற்போது இருக்கும் சினிமா ரசிகர்களையும் கவர்கிறது என்றால் சினிமாவில் பணிபுரிந்த முன்னோர்களின் உழைப்பே நம் கண்முன் தெரிகிறது. எம்.ஜி.ஆரின் வால் சண்டை, நம்பியாரின் வில்லத்தனம், நாகேஷின் நகைச்சுவை, முதல் முறையாக எம்.ஜி.ஆரோடு ஜோடி சேரும் ஜெயலலிதா என அத்தனைபேரும் நேரம் போவது தெரியாமல் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.


பாட்டு வந்தாலே வெளியே போகத்தூண்டும் இந்த கால படங்களுக்கு மத்தியில், அவ்வப்போது பாடல்கள் வந்தாலும் அத்தனைப் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. காரணம், எல்லாப் பாடல்களும் கதையோடு கலந்து இருப்பதே! ஏன்? ஏன்? ஏன்? என அடிமைகளாய் வேலைசெய்பவர்கள் கேள்வி கேட்க, ‘ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை’ என்று பாய்ந்து வந்து பாடுகிறாரே... ஹீரோன்னா இவருதம்பா என்று  இதயம் சொல்கிறது.

‘அதோ அந்த பறவைபோல...’ ‘ஆடாமல் ஆடுகிறேன்...’ ‘உன்னை நான் சந்தித்தேன்...’ ‘ஓடும் மேகங்களே...’ ‘பருவம் எனது பாடல்...’ ‘நாணமோ இன்னும் நாணமோ...’ என்று ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூத்தியின் மயக்கும் இசையில், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலாவின் அசரவைக்கும் குரலில், கண்ணதாசன், வாலி வரிகளில் அனைத்து பாடல்களும் மணி மணியாக ஒலிக்கிறது. பார்ப்பதற்கும் அத்தனை அழகு, திரையில் இருப்பது மக்கள் திலகம் அல்லவா!

‘நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்’ என்று மக்கள் திலகம் பாடும்போது கைத்தட்டல் அரங்கத்தை அதிரவைக்கிறது. ‘நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்’ என்று ஜெயலலிதவிடம் அவர் பாடும்போதும் சிலர் கைத்தட்டும் ஓசை கேட்கிறது!

ஜெயலலிதவின் அறிமுகப் பாடல் முடிந்ததும் அவர் தந்தை வந்து ‘நீ அயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாகி ஆனந்தம் அடையவேண்டும்’ என்று ஆசீர்வதிக்கும் காட்சி இந்த கால இளைஞர்களுக்கு ஆச்சரியத்தையேக் கொடுக்கிறது.

‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்டதும் ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்று சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகத்தின் கம்பீரம், அவருக்கு நிகர் அவரே என்பதை உறுதிப்படுத்தும் காட்சி. ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்க’ என்று நம்பியாரைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்பதும்,  ‘தோல்வியையே அறியதவன் நான்’ என்று நம்பியார் சொன்னதும் ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழகியவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் அனல் பறக்கிறது.

கடல் சார்ந்த பயணம் அதில் நடக்கும் போராட்டங்கள் என்பதால் காடு, தீவு, கடல், கடற்கரை, கப்பல் என காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்! கடலில் தத்தலிக்கும் கப்பலில் சண்டைக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாக படமாக்கிய இயக்குனர் பி.ஆர்.பந்தலுவின் திறமை பிரம்மிக்க வைக்கிறது.

டிஜிட்டல் வடிவத்தில் வெளியாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அந்த கால ரசிகர்கள் மட்டுமல்ல இந்த கால இளைஞர்களும் பார்த்து ரசிக்கலாம்!

0 comments:

Post a Comment