Monday 10 March 2014

போதைக்கு அடிமையான சினிமா எழுத்தாளர்கள்: போலீஸ் அதிகாரி குற்றச்சாட்டு..



மலையாள சினிமாவில் இளம் எழுத்தாளர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதாக, ஒரு போலீஸ் அதிகாரி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.


சினிமாவில் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் மாதிரி சில ஹீரோக்களும், வில்லன்களும் சித்தரிக்கப்படுகின்றனர். இதுபற்றி கொச்சி மரடு பகுதிக்கு உட்பட்ட சப்இன்ஸ்பெக்டர் ஏ.பி.விபின் கூறுகையில்,


சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் படைப்பாளிகள் சிலர் போதை மருந்து பயன்படுத்த தொடங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திரையுலகிற்கு வரும் இளம் தலைமுறையினரிடம் இந்த பழக்கம் இருக்கிறது.


 போதை மருந்து உட்கொள்வதால் கற்பனை வளம் பெருகி புதிய சிந்தனைகள் வருவதுடன், டென்ஷனும் குறைகிறது என்ற தவறான எண்ணத்தின் விளைவுதான் இது. ஹஷிர் மொஹமத் என்ற சினிமா எழுத்தாளர், தனது குடியிருப்பில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.


அவர் போதை மருந்து உட்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற செயல்கள் அதிக வருத்தம் அளிக்கிறது. சினிமாதான் இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.


இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு மலையாள நடிகர், ஒருவரின் தனிப்பட்ட பழக்கத்துக்கு சினிமா படங்கள் மீது பழி சுமத்தக்கூடாது. நான் வில்லன் வேடங்களில் நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது.


அவரவர் பலவீனத்தை பொறுத்தே இந்த பழக்கம் வருகிறது என்றார். மலையாளப் படவுலகினர் மீது போலீஸ் அதிகாரி பகிரங்கமாக தெரிவித்த இந்த கருத்து, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment