Sunday, 23 March 2014

சமுத்திரகனியை பாராட்டிய சகாயம் IAS ...!



நிமிர்ந்து நில் படம் பார்த்து பலரும் தன்னை பாராட்டினர்கள் என்று சமுத்திரகனி தெரிவித்தார்.


அதில் முக்கியமாக சகாயம் IAS தன்னிடம் பேசும்போது ஊழலுக்கு எதிராக இந்த உலகில் யார் குரல் கொடுத்தாலும் அவன் என் நண்பன் என்று சொல்லி பாராட்டினார்.


 அவரின் ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து’  என்ற வாசகத்தை தான் படத்தில் பயன்படுத்தினேன், அவர் அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது.


ஜெயம் ரவியின் கதாபாத்திரதின் பெயர் அரவிந்த் என்று இருப்பதால் பலரும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோடு அதை ஒப்பிடுகிறார்கள்.


நான் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் கதையை ஜெயம் ரவியிடம் சொல்லிவிட்டேன். அதனால் அதற்கு இதற்கும் சமந்தமில்லை.


 நாங்கள்  நினைத்த பலவிஷயங்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து வந்தன. அரவிந்த் என்ற என் நண்பன் இங்கே இருக்கும் ஊழல் விஷயங்களால் திணறிப்போய் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டான்.


அவனை நினைத்துத் தான் ஜெயம் ரவியின் கதாபாத்திரதிற்கு அரவிந்த் என்று பெயர் வைத்தேன் என்றார்.

படத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை...!காரணம் சொல்லும் நடிகை...!



வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.


 "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் பணம் வாங்காமலும் நடிக்க தயார்" என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல. அன்னிக்கு அனுமதிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு ஹீரோயினா இருந்திருப்பேன்.


இப்போ கல்யாணமாகி துபாயில செட்டிலாகிட்டேன். என்னோட கணவர் துபாய், லண்டன் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார். நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துறேன். தீடீர்னு ஒரு நான் சினிமால நடிக்கட்டுமான்ன ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கு விருப்பமுன்னா நடி என்றார். நடிக்க வந்து விட்டேன்.

நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. சினிமா மேல உள்ள பக்தியில நடிக்க வந்திருக்கேன். அதனால கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். என்னோட வாழ்க்கை ரொம்ப மார்டன்தான்.


அதனால வில்லேஜ் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆயிரத்தில் இருவர்ங்ற படத்துல அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல கதையோட வந்த இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். என்னோட திறமையை வெளிப்படுத்துற மாதிரி நல்ல கேரக்டரோடு வந்தால் பணம் வாங்காமல் கூட நடிக்க ரெடி. என்கிறார் ரித்திகா.

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!



ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

இவுங்க தாங்க சொந்த தியேட்டர்ல படம் காட்ரவங்க...!



சிவாஜி குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார்.


இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி ரிலீசானது.


கும்கி படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சரவணன் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளுடன் படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட்டை படம் கொடுக்கவில்லை.


 என்றாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபமும் இல்லை, பெரிய அளவில் நஷ்டமும் இல்லை என்பது சினிமா வியாபார வட்டார தகவல்.


படம் 25 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியது. சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் 50வது நாளை தொட்டது.


அதுவும் ஓரிரு காட்சிகளாக. சிவாஜி குடும்பத்தின் தியேட்டரான சென்னை சாந்தியில் தினமும் ஒரு காட்சியாக திரையிட்டு 100வது நாளை எட்டிப்பிடிக்க வைத்துவிட்டார்கள்.


கும்கியை போலவே இந்தப் படமும் 100 வது நாள் போஸ்டரை கண்டுவிட்டதில் சிவாஜி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி.

பாடல்களோடு வருகிறார் தெனாலி ராமன்!



நடிகர் வடிவேலுவின் ரீ-என்டிரி படமான ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’


 படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு போன்ற


போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


’ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.


 ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடித்திருக்க,


இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் ராதா ரவி, மனோபாலா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.